காவி உடை தரிக்கும் கபடதாரிகள் – எச்சரிக்கை!

2 Min Read

காஜியாபாத், முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசியமாகப் பல இடங்களில் காட்சிப்பதிவு கருவிகள் (CCTV Cameras) பொருத்தப்பட்டு, அவை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வெளிவந்ததும், மடத்தின் தலைவரான பார்ப்பனச் சாமியார் முகேஷ் கோஸ்வாமி தலை மறைவாகிவிட்டார்.

அண்மைக் காலமாக, பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் ஆபாச காணொலிகளை வழங்கும் இணையதளங்களில் அதிக அளவில் பரவி வந்தன. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்களின் காணொலிகளும் அடங்கும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையின் சோதனையின்போது, அனைத்துக் காணொலிகளும் ஒரே இடத்தில் பதிவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் முராத் நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்திற்குச் சென்று, ஆற்றில் குளித்துவிட்டு அதன் உடை மாற்றும் அறையைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, உடை மாற்றும் அறையைச் சோதித்தபோது, அங்கு மிகவும் நவீனமான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தக் கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு  கோயில் தலைமை மதகுருவாக இருக்கும் மகந்த் முகேஷ் கோஸ்வாமியின் கைப்பேசியில்  இருந்தது.

காவல்துறையினர் மகந்தின் கைப்பேசியை சோதித்தபோது, அதில் பெண்கள் உடை மாற்றும் பல காணொலிப் பதிவுகள்  (வீடியோ கிளிப்புகள்) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் மடத்தில் உள்ள சாமியார்களையும், ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மகந்த் முகேஷ் கோஸ்வாமி மீது முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு கங்கைக் கரையில் குளித்து விட்டு உடைமாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த தற்காலிகக் கூடாரத்திலும் இதே சாமியார் இதே போன்று காமிராவை வைத்து பிடிபட்டு உதைபட்டார். அந்த வழக்கில் மாநில காவல்துறை அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மன்னிப்புக் கடிதம் வாங்கி அவரை விட்டுவிட்டது. மேலும் அந்தக் கூடாரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.

இதனால் தனது மடத்திலேயே புதிதாக ஆடை மாற்றும் அறையை ஏற்பாடு  செய்து இந்த ஆபாச மான வேலையை அந்தப் பார்ப்பனச் சாமியார் தொடர்ந்துள்ளார்.

கடவுள், மதம், மடம், கோயில், காவி பக்தி என்பது எல்லாம் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! காவி என்பது ஊரை ஏமாற்ற அணியும் கபட  நாடகம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில்  எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு என்ன நடந்தது?  தன்னிலை விளக்கமாக கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண் எழுத்தாளர் புலம்பவில்லையா?

தொலைக்காட்சியிலும் அது ஒலிபரப்பப்பட்ட துண்டே! மறைந்த புட்டபர்த்தி சாயிபாபாவின் ஆசிரமத்தில் ஓர் அறையில் பெண்கள் கைப்பையும், பட்டுப்புடவைகளும் குவிந்து கிடந்தனவே!

மக்களை ஏமாற்றும் இந்த மத(ட)த் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படாவிட்டால் காவல்துறை, சட்டம், நீதிமன்றம் முதலியவை தன் மரியாதையை இழக்க நேரிடும் – எச்சரிக்கை!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *