சென்னை, ஆக.5- பசுமை தோழர்கள் 40 பேருக்கு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்ட நிறைவு சான்றிதழை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பசுமை தோழர்கள்
தமிழ்நாடு அரசு,காலநிலை நடவடிக்கை மற்றும் சூழலியல் நிர்வாகத்திற்கென பிரத்யேகமாக, இந்தியாவின் முதல்முறையில் மாநில அளவிலான முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கியது. அரசு எந்திரத்தில் இளம் திறமையாளர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 மாவட்டங்களுக்கு 38 பேர், மாநில அளவில் 2 பேர் என மொத்தம் 40 பசுமை தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்ற இயக்கம், ஈரநில இயக்கம் மற்றும் நெய்தல் மீட்சி இயக்கம் உள்ளிட்ட முக்கிய இயக்கங்களை முன்னெடுத்து செல்வதில் பெரும்பங்காற்றிய முதல் தொகுதி பசுமை தோழர்களது பணிக்காலம் கடந்த மாதம் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (4.8.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 பசுமை தோழர்களுக்கு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்ட நிறைவு சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இரண்டாம் தொகுதி
முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 மாவட்ட அளவிலான தகுதியான நபர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் மாத உதவித்தொகையாக ரூ.65 ஆயிரமும், பயண செலவினத்திற்கென கூடுதலாக ரூ.10 ஆயிரமும் பெறுவார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்களுக்கு 30 நாள் அறிமுக பயிற்சியும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இயக்குநர் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சிறீனிவாஸ் ரெட்டி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சிறப்பு செயலாளர் ஆஷிஸ் குமார் சிறீவஸ்தவா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் எம்.ஜெயந்தி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் கல்வி களுக்கான நிறுவனத்தின் இயக்குநர் எம்.வெங்கடரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.