அமெரிக்கா, ஆக.5- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை சமீபத்தில் அறிவித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்தார். எனினும் அபராதம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிகப்பெரிய அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமின்றி, அதை பின்னர் வெளிச்சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கின்றனர்’ என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர், ‘ரஷ்ய போர் எந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் அவர்களுக்கு (இந்தியா) கவலை இல்லை. எனவே அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்துவேன்’ என்றும் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.