திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம் – (2)

5 Min Read

அஞ்சனா ஊடகவியலாளர்

இந்தக் காலகட்டத்தில், திருமணமாகாத பாலின ஜோடிகளில் 30 சதவீதம் பேர் ஒன்றிணைந்து (Cohabiting / Living together) வாழ்ந்து வந்தனர். இவ்வாறு இணைந்து வாழும் ஆண்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாரபட்சம் என குரல் எழுப்பினர்! திருமணமாகாத பெண்களுடன் வாழும் ஆண்கள், திருமணமான ஆண்களைப்  போலவே பாலியல் வன்கொடுமை வழக்குகளிலிருந்து அதே சட்டப்பூர்வ குற்ற விலக்கை அனுபவிக்க வேண்டும் என சில ஆண்கள் முன்மொழிந்தனர் என சன்ரா மக்நீல் (Sandra Macneil) என்ற பெண்ணியலாளர் நினைவுகூருகிறார்.

பூனைகளால் எலிகளுக்கு நன்மை விளையுமா? பெண்கள் எதிர்நோக்கும் பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்கள் ஆண்களை சாராமல், தனித்து இயங்கி குரல் எழுப்புவதற்கான அவசியத்தை இந்நிகழ்வு தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

1980களில், திருமணத்தில் பாலியல் வன்கொடுமை புரிவதை குற்றச் செயல் என பிரகடனம் செய்ய வேண்டுமென பிரச்சாரம் செய்ய, இங்கிலாந்து முழுவதும் உள்ள பெண்ணிய இயக்கங்கள் இணைந்து கொண்டனர். இவர்களுள் Women’s Aid, Rape Crisis, Women Against Violence Against Women போன்ற இயக்கங்கள் தீவிரமாக பிரச்சாரங்கள் செய்தன.

மகளிர் அரங்கம்

கரோல் ஹானிஷ்

‘The personal is political’ என்கிற பெண்ணிய வாசகம் கரோல் ஹானிஷ் (Carol Hanisch) என்ற பெண்ணியலாளரால் முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது. அதுவே பாலியல் வன்கொடுமைக்கு எதிரான இயக்கத்தின் (anti rape movement) அடிப்படைத் தத்துவமாக உருவானது. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் பரிமாணங்கள் உண்டு. வேலையிடத்தில் மட்டுமல்ல, படுக்கையறை மற்றும் சமையலறைகளில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஆதிக்கம் செலுத்தும் வகையிலான உறவுமுறைகள் உண்டு, அவை பெண்ணின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதே அத்தத்துவத்தின் சாரம். இரண்டாம் அலை பெண்ணிய காலங்களில் உலகம் முழுவதுமாக பரவியுள்ள பெண்ணிய இயக்கங்களிடயே, இக்கருத்தியல் வேர் கொண்டது.

இறுதியாக, அக்டோபர் 1991 இல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்கள் R v R வழக்கில் திருமண பாலியல் வன்கொடுமையை ஒரு குற்றமாக அங்கீகரித்தன. தனது தீர்ப்பில், லார்ட் லேன் கீழ்க்காண்பதை உறுதிப்படுத்தினார்: ‘திருமணம் ஆகிவிட்டது என்பதாலேயே ஒரு மனைவி தனது கணவனுடன் உடலுறவு கொள்வதற்கு  சம்மதிக்கிறாள் என்ற முன்முடிவு இனி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவளுடைய உடல்நிலை எதுவாக இருந்தாலும் சரி, அல்லது அவளுடைய ஆட்சேபணைகள் எவ்வளவு கேள்விக்குரியதாக இருந்தாலும் சரி, அவள் மறுத்ததற்கு பிறகு கட்டாயப்படுத்துவது பாலியல் வன்முறையே!’

மகளிர் அரங்கம்

ஆன்ட்ரூ டேட்

இந்தத் தீர்ப்பு பெண்ணியவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், குற்றவியல் தீர்வுகளுக்குப் பதிலாக சிவில் நிர்வாகத்தை மேற்கொண்டு திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பிரச்சினைகளைக் கையாளும் குடும்ப நீதிமன்றங்கள், திருமணமான இணையருக்கு பாலியல் வன்கொடுமைக்கான குற்றவியல் வரையறையை இன்னும் பயன்படுத்துவது மிக அரிது.

குடும்பச் சட்ட வழக்கறிஞரும் பெண்ணியப் பிரச்சாரகருமான சார்லட் ப்ரூட்மேனின் (Charlotte Proudman) கூற்றுப்படி, குடும்ப நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமைக்கான குற்றவியல் வரையறையைப் பயன்படுத்தக்கூடாது என்று வழக்கறிஞர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக என்ன பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வரையறை இல்லை. சார்லட், கம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிகத் திறமையான பாரிஸ்டர். இங்கிலாந்தில் தற்போது சட்டத் துறையில் பணியாற்றும் துணிகரமான பெண்ணியலாளர்களில் ஒருவர். He said She said: Truth, Trauma and the Struggle for justice in Family court என்கிற அவருடைய நூல் மே மாதம் வெளியாகி இருந்தது.

நீதிபதிகள் ‘பகுதியளவு பாலியல் வன்கொடுமை’ அல்லது ‘விரும்பத்தகாத பாலியல் உடலுறவு’ போன்ற சொற்களைப் பயன்படுத்தி எடுக்கும் அனைத்து வகையான விநோதமான முடிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விளக்கங்களுக்கு என்ன அர்த்தம்? இது பெண்களின் பாலியல் வன்கொடுமை துயர அனுபவங்களை குறைத்து மதிப்பிடுகிறது என்று சார்லட் கூறுகிறார். இவ்வாறு பல மைல்கற்களை கடந்து பெண்ணிய போராட்டங்கள் இங்கிலாந்தில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னொன்று என்னவெனில், ஒரு பெண் பாலியல் உறவிற்கான தனது மறுப்பைத் தெரிவிப்பது என்பது எவ்வாறு திரிபு படுத்தப்படுகிறது. ‘இல்லை’ என்பது கூட கவர்ச்சியான பாலியல் நடத்தையாகப் பார்க்கப்படுகின்றது.

விருப்பு இருந்தாலும் பெண்கள் ‘நோ’ தான் சொல்வார்கள், தங்களை ஆண்கள் வற்புறுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் என்றொரு கற்பிதம் பல ஆண் மய்யவாத இலக்கியங்களிலும் சினிமா உலகிலும் வேரூன்றி உள்ளது. காதலுக்கான மறுப்பும் அவ்வாறே புரிந்துகொள்ளப்படுகிறது. பெண்களைத் துரத்தி துரத்தி இம்சை பண்ணுவதெல்லாம் காதல் விளையாட்டாக சித்தரிக்கப்படுகிறது.

காதலுக்கும் பாலுறவுக்குமான மறுப்பு (Rejection) ஆண்மைக்கான கௌரவ குறைச்சலாகக் காண்பிக்கப்படுகிறது; பார்க்கப்படுகிறது. இன்றைய இந்திய சினிமா இன்னும் இவ்வகையான கற்பிதங்களைப் படமாக்குவதை இன்னும் முழுமையாக நிறுத்தவில்லை. ‘ஆண்களின் உளவியல் அப்படித்தானே?’ என நியாயம் கற்பிக்கப்படுகிறது. பெண்களின் மறுப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சிறு வயதிலிருந்தே ஆண்களுக்கு கற்றுத் தர வேண்டும். ‘இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும், இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னுமொரு ஜென்மம் வேண்டும்’ என்று பாடும் இதய பலவீனமான ஆண் கதாபாத்திரங்களை இயல்பாக்கம் செய்வதை முதலில் படைப்புலகம் நிறுத்த வேண்டும்.

இன்னொரு புறம் ஆன்ட்ரூ டேட் (Andrew Tate) போன்ற பெண் வெறுப்பு பிரச்சார ஆண்கள் அமெரிக்க ஐரோப்பிய ஆண்களிடம் பெண் வெறுப்பு, பெண் வன்முறை, பாலின பாகுபாடு போன்ற எதிர்மறையான கருத்தியல்களை விதைத்து வருகின்றனர். இவர் மேல் வழக்குகளும் சமூக ஊடகத் தடைகளும் உள்ளன. Incel கருத்தியல்கள் பதின்ம வயதினர்/இளைஞர்களிடையே பரவி ஆபத்தான செய்கைகளை தூண்டுவது தொடர்பான ஒரு விழிப்புணர்வை Netflix-இன் Adolescence என்ற தொலைக்காட்சி தொடர் வெளிச்சம் போட்டு காட்டியது. இதுவரை 141 மில்லியன் பார்வைகளை கடந்தது மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் என்றுமில்லாத அதிர்வலைகளை அந்தத் தொடர் ஏற்படுத்தியது.

நாமும் நம் நாடுளில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவற்றை பேணுவதற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது. திருமண பாலியல் வன்கொடுமை தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

எவ்வகை உறவு முறையிலும் ‘அழுத்தமற்ற சம்மதம்’ – free consent பெறாத பாலியல் புணர்வை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெண்களை உடைமைகளாக பார்க்கும் ஆணாதிக்க சிந்தனை முறை ஒழிய வேண்டும். இச்சிந்தனை கருத்தியல் நீதித்துறை, சட்ட அமுலாக்க துறை, நாடாளுமன்றம் என நாட்டின் அதிகார மய்யங்களில் ஆழமாகப் புரையோடிப் போயுள்ளது.

சட்டங்கள் மட்டுமே பாலின சமத்துவத்தை தந்து விடப் போவதில்லை. இந்த சட்டங்களை அமுல்படுத்துவர்கள் மனிதர்கள் தானே? மனிதர்களின் ஆணாதிக்க சிந்தனை முறை மாறாமல் இருக்கும் பட்சத்தில், சட்டங்கள் மட்டுமே பாலின அடக்குமுறை, வன்முறை, பாலின பேத பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா?

(இக்கட்டுரையாளர் அஞ்சனா, பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.)

நன்றி: ‘ஹெர் ஸ்டோரிஸ்’ இணையதளம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *