சென்னை, ஜூன் 11 – தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்கலைக்கழக மாணவர் களின் நலனை பாதுகாக்கவும், பல்கலைக்கழக செயல் பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க, துணை வேந்தர்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து விதி முறை களை வகுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், துணைவேந்தர்கள் தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என கால நிர்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.