ஆஸ்திரேலியாவில் ஒரு பையனோ பெண்ணோ பதின்மவயதை நெருங்கும்போது அவர்களுக்கு வீட்டில் தனியறை கொடுக்க வேண்டும். அந்த வாடகை ஷேரை பசங்க சம்பாதித்து கொடுக்க வேண்டும். அவர்கள் டாமினோ , கேஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களில் வேலை பார்த்து அந்த பணத்தை கொடுக்க வேண்டும்.
சவுந்தர் இதை சொல்லும்போது இது இந்தியாவில் எந்தளவு சாத்தியம் என்று தோன்றியது. நான் அமெரிக்காவில் வசித்த நாட்களில் அங்கு இதை பார்த்துள்ளேன். எனது மச்சான் அமெரிக்காவில் இருக்கார். அவரது மகள் அங்கு பிறந்ததால் அமெரிக்கன் சிட்டிசன். இப்போது பதினாறு வயது. இப்போதே பதினெட்டு வயதுக்கு பிறகு நான் வேலைப்பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று சொல்கிறார்.
எனது மகளுக்கு இன்றுதான் டீமேட் கணக்கு தொடங்கியுள்ளேன். எப்படி பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது என்று வகுப்பெடுக்க தொடங்கியுள்ளேன். ‘‘காலேஜ் கட்டணம் நான் கட்டிடுறேன். டீமேட்டில் கொஞ்சம் பணம் போடுறேன். உன்னோட மற்ற செலவுக்கு ஷார்ட் டேர்ம் , ஸ்விங் டிரேடிங் செஞ்சு அப்பப்ப காசு சம்பாதிச்சுக்க’’ என்று சொல்லிட்டேன். வர்ற லாபத்தில் எப்படி மீண்டும் பங்குகளை வாங்கி முதலீடு செய்வது என்று சொல்லித் தருகிறேன்.
என்னைக்கேட்டால் இந்தியாவில் பதினெட்டு வயதில் பிள்ளைகளை வெளியில் துரத்தி விடும் அளவுக்கு நாம் இன்னும் மெச்சூரிட்டி அடையவில்லை. ஆனால் இருபத்தோரு வயதுக்குப்பிறகும் பிள்ளைகளை வீட்டில் வைத்து சோறுபோடுவது நாம் செய்யும் கிரிமினல் குற்றம். அதற்குப்பிறகு அவர்கள்தான் சம்பாதிக்கணும். அவர்களே திருமணத்துக்கு இணையை தேடிக்கொள்வது இன்னும் நல்லது.
அவர்கள் நம்மிடம் சொன்னால் நாம் சில உதவிகள் செய்யலாம். மற்றபடி இன்னொருத்தர் வாழ்க்கையை நாம் தூக்கி சுமக்க முடியாது. ஒவ்வொருவரும் இந்த ஆரம்பப் புள்ளியில் தொடங்கினாலே இந்தியாவில் ஆணவப்படுகொலைகள், வரதட்சிணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் பெருமளவில் குறைந்துவிடும்.
– விநாயக முருகன்
நன்றி: ‘மின்னம்பலம்’ இணைய தளம்