தமிழ்நாடு அரசு கல்வியையும், மருத்துவத்தையும் தன் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ற வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மருத்துவத் துறையில், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் மூலம் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் திட்டம் மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது. இப்போது அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 7 லட்சம் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதவிர 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதெல்லாம் உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் அளிக்கப்படும் சிகிச்சைகளாகும். என்றாலும் மக்கள் முன்கூட்டியே தங்கள் உடல் நிலையை பரிசோதிப்பது இல்லை. அதன் காரணமாகத்தான் பல உடல் நலக் குறைவுகள் ஏற்படுகின்றன.
இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதியன்று தமிழ்நாடு சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் 3 முகாம்கள் வீதம் 388 பஞ்சாயத்து யூனியன்களில் 1,164 முகாம்களும், சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 15 முகாம்களும், 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 முகாம்களும், 10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 முகாம்கள் என்றும் ஆக மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
முதல்கட்டமாக 38 மாவட்ட தலைநகரங்களிலும், இந்த முகாம் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. சென்னையில் இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம் போன்றவற்றில் மருத்துவ நிபுணர்கள் மூலம் பரிசோதனைகளை செய்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
அதோடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் இந்த முகாமில் வழங்கப்படுகிறது.
இப்போது நடந்த முகாம்களில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் மக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பப் பட்டன. தனியார் மருத்துவமனைகளில் பெரும் பொருட் செலவில் செய்யும் பரிசோதனைகள் அனைத்தும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இலவசமாக நடப்பது நிச்சயமாக மக்களுக்கு நலம் பயக்கும்.
எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன், எக்கோ, கார்டியோகிராம், ரத்த பரிசோதனை என்று அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 6 மாதங்களில் 1,256 முகாம்களும் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருக்கிறார்.
இது மருத்துவத்துறையில் ஒரு பெரிய புரட்சி என்றால் அது மிகையாகாது. நோய் நொடிகள் வராமல் இருக்க உப்பு, எண்ணெய், சர்க்கரையை சற்று குறை என்பது போன்ற ஆலோசனைகளும் விழிப்புணர்வாக வழங்கப்படுவது வெகு சிறப்பாகும்.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் 4.8.2025