தமிழ்நாடு அரசு, சமூகநலத் துறையின் உடனடி கவனத்திற்கு.. இராமகிருஷ்ண குடில் நிர்வாகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் சங் பரிவார்! தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

3 Min Read

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிறுவனம் கடந்த 1948இல் பிரம்மச்சாரி இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்டு, ஆதரவற்ற ஆண் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் உண்டு உறைவிடப் பள்ளியாக நடைபெற்று வருகிறது. தொடக்கக் காலங்களில் மாணவர்களுக்குச் சீருடைகளுக்கும், மூன்று வேளை உணவும் வழங்கிடவே பெரும் சிரமத்திற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிதி திரட்டி நடத்தி வந்தார்.

இராமகிருஷ்ண குடிலுக்குப் பலரும் உதவி

இராமகிருஷ்ண குடில் நிருவாகம் பக்தி சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் தன்னலம் கருதாமல் ஆதரவற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டதால் திராவிட இயக்க மூத்த தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், வள்ளல் எம்.ஜி.ஆர் உள்பட அனைவருமே குடிலின் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் நிலங்களைக் கொடையாக அளித்துள்ளனர். நெல், பருப்பு, தானியங்கள், காய்கறிகள், குடிலில் வளர்க்கப்படும்; கால்நடைகளுக்குத் தீவனங்கள் என பொதுமக்கள் கொடையாக அளித்துள்ளனர்.

இந்நிலையில் குடிலின் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் எடுப்பதாகக் கூறி முதலில் உள்ளே நுழைந்த சங்பரிவார் அமைப்புகள், குடில் நிருவாகத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நிதி நெருக்கடியில் இருந்த நேரத்தில் 5 கோடி ரூபாய் நன்கொடை தருவதாகவும், நிருவாகத்தைச் சிறப்பாக நடத்த உதவுதாகவும் கூறி, ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி, குடிலின் அனைத்து வகையான ஆவணங்களையும் கைப்பற்றிக் கொண்டு, அதன் தலைவராக இருந்தவரை, ஒரு வழக்கில் சிக்க வைத்து குடில் நிருவாகத்தைத் தன்வசப்படுத்த முயன்றனர். மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், தப்பி ஓடினர்.

குடிலின் நிர்வாகக் குழுவின்
ஆர்.எஸ்.எஸ். நுழைவு

குடிலின் நிருவாகத்தை நடத்திட 12 பேர் கொண்ட நிருவாகக் குழு ஒன்று இராமசாமி அடிகளார் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் குழுவில் இருந்த மூவர் தற்போது இல்லை. சங்பரிவார் அமைப்பில் உள்ளவர்களைக் குழு நிருவாகிகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பாக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, தங்களது பணபலம், அதிகார பலத்தைக் கொண்டு மாவட்டப் பதிவாளரிடம் புதிய நிருவாகக் குழுவைப் பதிவு செய்து, அதனை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நிருவாகத்தைக் கைப்பற்ற முயன்றுள்ளனர். அதனை ஏற்க மறுத்து தற்போதைய குடில் தலைவர் பிரம்மச்சாரி வீரச்சந்திரன் அவர்கள் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் நாளை (5/8/2025) வரவுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமமூர்த்தி தரப்பினர் தங்களது சங்பரிவார் அமைப்பின் 60 க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் உள்நுழைந்து நிருவாகத்தை கைப்பற்றி உள்ளனர்.

பழைய ஊழியர்கள் எல்லாரையும் வெளியே விரட்டி விட்டியுள்ளனர். அதன் தலைவர் பிரம்மச்சாரி வீரச்சந்திரன் அவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் செய்திகள் வருகின்றன. எல்லா அலுவலக பூட்டுகளையும் உடைத்து விட்டு புதிய பூட்டுகளைப் போட்டுள்ளனர். உச்சகட்டமாக குடிலின் நுழைவாயிலையும் பூட்டியுள்ளனர். அங்குள்ள பொது நலத் தொண்டர்கள், பொது மக்கள் செய்த முயற்சியின் காரணமாகவும், முற்றுகைப் போராட்டமாக மாறும் என எச்சரித்ததாலும் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் பத்து பேரை மட்டும் பணியமர்த்தியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. .

சாய்பாபா பஜனை மடமாக மாற்ற திட்டம்

குடிலின் சட்டதிட்டப்படி, குடிலில் பயின்று பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் மேனாள் மாணவரே தீட்சை பெற்று குடிலின்  தலைவராக வர முடியும். சம்சாரிகளுக்கு அனுமதியில்லை. தலைவராக இருப்பவரே பொருளாளராக இருந்து நிதியை கையாள அதிகாரம் பெற்றவராவார். அவர் குடிலிலேயே தங்கி நிருவாகத்தை நடத்தி வரவேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகளின் உறைவிடமான இராமகிருஷ்ண குடிலை சாய்பாபா பஜனை மடமாகவும் RSSஇன் பயிற்சி மய்யமாகவும் மாற்ற முயலும் சங்பரிவார் அமைப்புகளின் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசும், அதன் சமூக நலத் துறையும் உரிய கவனம் செலுத்தி, ஏழை, எளிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.சின் பிடிக்குள் சிக்கிவிடாமல் காக்க வேண்டியது அவசியமும், அவசரமுமாகும்.

கி.வீரமணி
 தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.8.2025        

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *