2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை! தமிழ்நாடு அரசு உறுதி

1 Min Read

சென்னை, ஆக.4- தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தன்னுடைய ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் கூறியதாவது:

வறுமை என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே இருக்கிறது. நல்ல நலமுள்ள சமுதாயத்தை உருவாக்க வறுமையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.அப்படியாக வறுமையை ஒழிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

தமிழ்நாடு சமூகநீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைத்து, வறுமையை வெற்றிகரமாக குறைத்து வருகிறது. அந்த வகையில் நிதி ஆயோக் அறிக்கையில் ‘தமிழ்நாடு வறுமை இல்லை’ என்ற இலக்கில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. இது மட்டுமல்லாமல், வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி மதிப்பெண் 100-க்கு 72 என்று இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மதிப்பெண் அதில் 92 என்ற அளவில் இருக்கிறது.

வறுமையை ஒழிப்பதில் நீடித்த வளர்ச்சி இலக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்குமான பொது வினியோகத்திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகிய பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தி உள்ளது.

இதுதவிர ஊக்கமளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாட்டு முன்னெடுப்புகள் போன்ற முன்னோடித் திட்டங்களும் வறுமை ஒழிப்புக்கு ஒரு பாலமாக இருக்கிறது.

2030-க்குள் மக்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சுகாதார அமைப்புகள், கல்வி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் போன்ற சமூக நிறுவனங்களை வலுப்படுத்தி வறுமையை அதன் அனைத்து பரிமாணங்களிலும் முழுமையாக அறவே ஒழித்து நிலையான முன்னேற்றத்தை வழங்குவதில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *