ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சரும், பழங்குடியின மக்களுக்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற அமைப்பை நிறுவியவருமான சிபு சோரன் தனது 81-ஆம் வயதில் இன்று மறைவுற்றார். பழங்குடியின மக்களைத் திரட்டி, அரசியல் சக்தியாக்கிப் போராடியதுடன், ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாகக் காரணமானவர்களுள் முக்கியமானவர்.
மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டக் களங்களில், வடநாட்டில் நாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சமூகநீதி உணர்வாளர். சந்தால் பழங்குடியின மக்களை ஒன்றிணைத்துப் போராடத் தொடங்கியவர், மதவாத சக்திகளுக்கெதிராகவும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர். அவருடைய மைந்தர் ஹேமந்த் சோரன் அவர்கள் தான் தற்போதைய ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருக்கிறார். இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவராகவும் இருந்து, பா.ஜ.க.வுக்கு எதிரான களத்தில் உறுதியுடன் செயல்படுகிறார்.
இத்தகைய மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்து நெடுங்காலம் அதனை வழிநடத்திய மக்கள் போராளி சிபுசோரன் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது மைந்தர் சிபுசோரன் உள்ளிட்ட கட்சியினர், தொண்டர்கள், உறவினர்களுக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
4.8.2025