சென்னை, ஆக.4- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (2.8.2025) தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம், 388 வட்டாரங்களில் ஆயிரத்து 164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள்தொகை 10 லட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும், என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
நேற்று முன்தினம் (2.8.2025) ஒரே நாளில் மாவட்டத்திற்கு ஒரு முகாம் வீதம் 38 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில், ஒரே நாளில் 44 ஆயிரத்து 418 பேர் முகாம்களில் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 935 பேரும், 2ஆவதாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 13 பேரும், 3ஆவதாக நீலகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 904 பேரும் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.