கடவுள் காப்பாற்றவில்லை! அமெரிக்காவில் இஸ்கான் கோவிலுக்குச் சென்ற நான்கு இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழப்பு

வெர்ஜினியா, ஆக. 4– அமெரிக்காவில் இஸ்கான்  கோவிலுக்கு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கச் சென்ற 4 இந்தியர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

4 பேர் உயிரிழப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (89), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) நியூயார்க் நகரில் வசித்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் கடந்த வாரம் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மார்ஷல் பகுதியில், இஸ்கான் அமைப்பால் திறக்கப்பட்ட பிரபுபதாஸ் தங்க மண்டபம் என்ற கோவிலுக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஓஹியோ மாவட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. விபத்துக்குள்ளான இடத்திலிருந்து அந்த நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இத்தகவலை மார்ஷல் பகுதி ஷெரிப் மைக் டவுகெர்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் காவல்துறையினரிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர். குடும்பத்தோடு கோவிலுக்கு நன்கொடை வழங்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாகவும், அந்தப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிலுக்குக் காணிக்கை செலுத்தச் சென்ற வழியில் ஏற்பட்ட இந்த விபத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு. பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருக்கக்கூடும் என்ற அச்சம், அவர்களது மன வேதனையை மேலும் அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கும் ‘ஏ அய்’ தொழில் நுட்பம்

சென்னை, ஆக. 4– பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஅய் தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் பயணிகள் வாகன கண்காட்சி நடைபெற்றது.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்களது கண்டுபிடிப்பான பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஅய் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அழுத்தத்தின் அளவை வைத்து…

இது தொடர்பாக குழுவைச் சேர்ந்த மூன்றாமாண்டு கணினி பொறியியல் அறிவியல் மாணவர் ஜான் மோசஸ் கூறியதாவது: எங்களது ஏஅய் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, பேருந்து இயக்கத்தில் ஓட்டுநருக்கு லேசான மயக்கம் போன்றவை ஏற்பட்டால் தானாகவே வேகத்தை குறைத்து, சாலையோரத்தில் பேருந்து நிறுத்தப்படும். உடனடியாக பேருந்து உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஓட்டுநருக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்சினையை அவர் பேருந்து உபகரணங்கள் மீது செலுத்தும் அழுத்தத்தின் அளவை வைத்து உணரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழுதைக் கண்டறியும்…

மேலும், பிரேக் எப்போது செயலிழக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்னதாகவே அறிவிக்கும் வகையில் பேருந்தின் அனைத்து அமைப்பையும் முழுமையாக கண்காணிக்கும். இவை பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன தொழில்நுட்பத்தை பழைய பேருந்துகளில் பொருத்த ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். புதிய பேருந்துகளில் பொருத்துவதற்கான செலவு சற்று குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு கண்டுபிடிப்பு குறித்து மாணவர் கபில் ப்ரீத்தம் கூறும்போது, “அதிநவீன கேமரா கொண்ட ரோவர் அமைப்பு, பேருந்தின் அடியில் சென்று பழுதை கண்டறியும். மேலும், அதை சரிசெய்ய அருகில் உள்ள பராமரிப்பு மய்யத்துக்கும் ஓட்டுநருக்கு வழிகாட்டும்” என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *