பெர்லின், ஆக. 4– பெர்லினில் அமைந்துள்ள ‘டுமாரோ பயோ’ (Tomorrow Bio) என்ற ஜெர்மன் ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதர்களின் சாகா வரம் நோக்கிய தேடலில் ஒரு புதிய, ஆராய்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. மரணமடைந்தவர்களின் உடல்களைப் பாதுகாத்து, எதிர்கால அறிவியல் வளர்ச்சியால் மீண்டும் உயிர் பெறச் செய்யும் வினோதமான திட்டத்தை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த முயற்சி மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
உயிருடன்…
டுமாரோ பயோ நிறுவனம், உயிரிழந்தவர்களின் உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு (கிரையோப்ரிசர்வேஷன் – Cryopreservation) விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் பாதுகாக்கின்றது. இதன் நோக்கம், உடல் செல்களின் சேதத்தையும் சிதைவையும் தடுத்து நிறுத்துவதாகும். எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளரும்போது, உறைய வைக்கப்பட்ட இந்த உடல்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நூதன முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சேவைக்கான கட்டணம் சற்றே அதிகம். $200,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறந்த உடலைப் பாதுகாப்பதில் நேரம் மிக முக்கியம் என்பதால், சட்டப்பூர்வ மரணத்திற்குப் பிறகு உடனடியாக செயல்முறையைத் தொடங்குவதே டுமாரோ பயோவின் திட்டமாகும். இதற்காக, 24 மணி நேரமும் செயல்படும் அவசரக் காத்திருப்பு குழுவையும் அவர்கள் வைத்துள்ளனர்.
வரவேற்பும், விமர்சனமும்!
இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தச் சேவைக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மரணத்திலிருந்து அறிவியல் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் டுமாரோ பயோ ஆகும். இதுவரை 3 அல்லது 4 மனித உடல்களையும், 5 செல்லப் பிராணிகளின் உடல்களையும் இந்தப் நிறுவனம் பராமரித்து வருகிறது என்பது வியப்புக்குரிய தகவல். விரைவில் அமெரிக்காவிலும் இந்தச் சேவையை அறிமுகப்படுத்த டுமாரோ பயோ திட்டமிட்டுள்ளது.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் போன்ற சில நிபுணர்கள், “மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதால் சிலர் இதை “அபத்தமானது” என்று சாடுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும், ‘டுமாரோ பயோ’வின் இந்த முயற்சி, மனிதர்களின் சாகா வரம் குறித்த ஆசையையும், எதிர்கால அறிவியல் மீதான நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது. இது ஒருநாள் சாத்தியமாகுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.