உதடுப் பிளவு, அண்ணப் பிளவு சிகிச்சை முறைகள்

5 Min Read

டாக்டர் ஜே.நவீன்குமார்
தலைமை முக அறுவை மருத்துவ 

மருத்துவம்

உதடுப் பிளவு என்பது ஒரு குழந்தை கருப்பையில் வளரும் போது ஏற்படும் குறைபாடு ஆகும். குழந்தையின் உதடுகளை உருவாக்கும் திசுக்கள் முழுமையாக இணையாதபோது உதடுப் பிளவு ஏற்படுகிறது. மேல் உதட்டில் ஒரு பிளவு அல்லது இடைவெளி இருக்கும். இதில் உதடு பொதுவாக ஒன்றாக இணையாது. இந்தப் பிளவு உதட்டின் ஒரு பக்கத்தில் அல்லது இரு புறத்திலும் இருக்கலாம். சில நேரங்களில், வாயின் மேல் கூரையான அன்னத்திலும் பிளவு ஏற்படலாம்.

உதடுப் பிளவு மற்றும் அண்ணப் பிளவு ஆகியவை மரபணு ரீதியாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் காரணமாகவும் உதடு பிளவு ஏற்படலாம்.

அறுவை சிகிச்சை மூலம் உதட்டில் உள்ள பிளவை மூடி, உதட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

சில குழந்தைகளுக்கு பேச்சுக் குறைபாடுகள், காது நோய்த் தொற்றுகள் போன்ற சிக்கல்களும் ஏற்படலாம்.

உதடுப் பிளவு உள்ள குழந்தைகளுக்கு உணவு உண்ணுவதில் சிக்கல்களும் ஏற்படலாம்.

இந்நோய் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து குறைபாடாலும் உதடுப் பிளவு ஏற்படலாம்.

700 பேரில் ஒருவருக்குத்தான் இந்நோய் ஏற்படுகிறது.

குழந்தை பிறக்கும்போதே உதடுப் பிளவு கண்டறியப்படுகிறது. ஆனால், குழந்தை பிறப்பதற்கு முன்பே ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்” மூலம் கண்டறியலாம்.

உதடுப் பிளவு ஏற்படக் காரணம்?

கேள்வி: பொதுவாக குழந்தைகளுக்கு உதடுப் பிளவு, அண்ணப் பிளவு ஏற்பட என்ன காரணம்?

மருத்துவர் பதில்: உறவுமுறையில் திருமணம் செய்வது, இரும்புச் சத்து குறைபாடு, மரபணுக்கள் பரம்பரைத் தன்மை போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

கேள்வி: உதடுப் பிளவுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை முறை பற்றிக் கூறுங்கள்.

பதில்: உதட்டுப் பிளவுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் சிகிச்சையைத் தாங்கக் கூடிய சக்தி குழந்தைக்கு இருக்காது.

குழந்தையின் எடை 4 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்கும்போதும், 3 மாதத்திற்கு மேல் இருக்கும்போதும் உதடுப் பிளவுக்கு சிகிச்சையளிக்கப்படும். உதடு உருவாகத் தவறும்போது ஏற்படும் இடைவெளியை மூடுவதே உதட்டுப் பிளவின் முதல் கட்ட சிகிச்சையாகும். உதடுப் பிளவு சரி செய்யப்பட்டு தையல் போடப்படும். அறுவை சிகிச்சை பொதுவாக 1 முதல் 2 மணி நேரம் வரை நடைபெறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுக்கும்போது, பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. திரவங்களும், உணவும் நேராக பிளவுக்குள் சென்றுவிடும். மூக்கிற்குள் நுழையலாம். இதனால் குழந்தைக்கு புரை ஏறும்.இதைத் தவிர்க்க பிளவுள்ள இடத்தில் சிறிய ‘பிளேட்’டைப் பொருத்தி வாயின் மேற்கூரையிலுள்ள இடைவெளி மூடப்பட்டு தசைகள் சீரமைக்கப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சை 2 மணி நேரம் நடைபெறும். பின்னர் குழந்தைக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்படும். எந்தவொரு காது பிரச்சினைகளும் இந்த நேரத்தில் தீர்க்கப்படுகினறன.

உதட்டுப் பிளவுள்ள குழந்தைக்கு 9ஆவது வயதில் ஈறுகளில் பிளவு இருந்தால் பற்களை சீரமைக்க எலும்புக்கு இடையே எலும்பு ஒட்டுதல் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

எலும்பு ஒட்டு அறுவை சிகிச்சை மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

19 முதல் 20 வயதில் அடுத்த கட்ட சிகிச்சை நடைபெறும்.  அப்போது குழந்தையின் முகம், உதடு மற்றும் மூக்கில் சில சிகிச்சைகள் தேவைப்படும்.

மேல் தாடையை முன்னோக்கியும், கீழ் தாடையை பின்னால் கொண்டு வரவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இந்த அறுவை சிகிச்சைகள் இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: அரசு மருத்துவமனைகளில் உதடுப் பிளவு அண்ணப் பிளவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

பதில்: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப் படுகிறது. வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

ஏழை எளியவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பொருட்செலவு அதிகமாகும். ஏழ்மை நிலையில உள்ளவர்கள் அவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றைக் கொடுத்தால் குழந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவசமாகவே செய்து கொடுக்கிறோம்.

கேள்வி: உதடுப் பிளவு சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் இயல்பான வாழ்க்கையை பெற முடியுமா?

பதில்: உதடுப்பிளவு அல்லது அண்ணப் பிளவுக்கு சிகிச்சைளிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள் முற்றிலும் இயல்பான வாழ்க்கையைப் பெறுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு வேறு எந்த கடுமையான மருத்துவப் பிரச்சினைகளும் இருக்காது.

கேள்வி: அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான வடு நிரந்தரமாக இருக்குமா?

பதில்: உதடுப் பிளவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் ‘வடு’ ஏற்படலாம். இது காலப்போக்கில் மாறிவிடும்.

கேள்வி: விபத்தினால் முகத்தில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து?

பதில்: வீட்டில் விளையாடும்போதும், கீழே விழுந்து முகத்தில் காயம்பட்ட குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். அதேபோல சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களையும் அழைத்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணம். வீட்டில் பால்கனி மற்றும் உயரமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது தவறி விழுந்து காயமடைகின்றனர். பெற்றோர்கள் அவர்களை சரியாக பாதுகாக்காததால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

மேலும் குழந்தைகளை வெளியில் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர் ‘பெட்ரோல் டேங்க்’ மீது அமர வைத்தும் செல்கின்றனர். வாகனம் வேகத் தடையை கடந்து செல்லும்போது குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதற்கு பெற்றோர்களின் பாதுகாப்பற்ற தன்மையே காரணம்.

கேள்வி: உதடுப் பிளவு அல்லது அண்ணப் பிளவுள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்று குறைபாடுகள் ஏற்படுமா?

பதில்:  உங்களுக்கு குடும்பத்தில் பிளவு உதடு மற்றும் அண்ணப் பிளவு இருந்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் ஒரு மரபணு ஆலோசகரிடம் உங்களை பரிந்துரைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் மது அல்லது புகையிலை பயன்படுத்துவது பிறப்பு குறைபாடுள்ள குழந்தையை பெறுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

உங்களுக்கு முன்பு இந்த நிலையில் ஒரு குழந்தை இருந்தால் உதடு அல்லது அண்ணப் பிளவு உள்ள குழந்தை பிறக்கும் ஆபத்து இருக்கும். ஆனால், இது நிகழும் வாய்ப்புகள் 2 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *