சென்னை, ஆக.4- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் வழிகாட்டுதலின் கீழ் 12 காவல் மாவட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்களுடன் எளிதில் அணுக கூடிய வகையிலும், தன்னார்வலர்களுடன் இணைந்து ஆதரவற்ற பொதுமக்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளுக்கு உரிய நேரத்தில் உதவிகளை வழங்கி நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் உதவி மய்யங்களான பெண்கள் உதவி மய்யம் (1091), குழந்தைகள் உதவி மய்யம் (1098), மூத்த குடிமக்கள் (1253), 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவிட பந்தம் சேவை (9499957575), குறுஞ்செய்தி அவசர உதவி (9500099100) மற்றும்; காவல் கரங்கள் உதவி மய்யம் (9444717100) வழியாக பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டனர்
அந்த வகையில், சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மய்யம், கடந்த 21.4.2021 அன்று துவக்கப்பட்டு 9444717100 என்ற எண்ணில் “மனிதம் போற்றுவோம்” மற்றும் “மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட 8,608 பேர் மீட்கப்பட்டும், அவர்களில் 5,762 பேர் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், மேலும் மீட்கப்பட்ட 1,387 பேரின் குடும்பத்தினரை கண்டறிந்து காணாமல் பரிதவித்த அவர்களது உறவினர்களுடன் மீள சேர்த்து வைக்கப்பட்டும், 1,056 மனநலம் குன்றியவர்கள் மீட்கப்பட்டு அரசு மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகளில் மனநல சிகிச்சைக்கு அனுப்பி உதவி செய்தும், 108 ஆம்புலன்ஸ் மூலம் தன்னார் வலர்கள் உதவியுடன் 403 பேர் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.
கலந்தாய்வுக் கூட்டம்
இதுவரை உரிமை கோரப்படாத 5,539 இறந்த நபர்களின் உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய விசாரணைக்குப் பின்னர் உரிய வழிகாட்டுதல்படி காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 2,48,319 உணவு பொட்டலங்கள் நன்கொடை யாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை மேம்படுத்தும் வகையில் காவல் கரங்கள் உதவி மய்யத்துடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (2.8.2025) நடந்தது.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி கலந்து கொண்டார். அப்போது ஆதரவற் றோர்களை மீட்க தேவைப்படும் மீட்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளான உடைகளுடன் இதர பொருட்கள் சுமார் 200 பேர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் கரங்கள் உதவி ஆணையர் பாஸ்கர், ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.