புதுக்கோட்டை, ஆக. 4- வேறு மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஏற்க முடியாது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
4 ஆண்டு சாதனைகள்
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி 2.8.2025 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் கடந்த 4 ஆண்டுகள் சாதனைகளை மலராக வெளியிட்டு வருகிறோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் புதிய திட்டங்கள் ஆகும். இதற்கு எடப்பாடி பழனிசாமி உரிமை கொண்டாட முடியாத காரணத்தினால் அவர்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டதாக கூறி வருகிறார்.
கூட்டணி
ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான். டாக்டர் ராமதாசும் முதலமைச்சரிடம் நலம் விசாரித்துள்ளார். அரசியலில் அவர்கள் எங்களது கூட்டணிக்கு வருவார்களா? என்பதையும் கூட்டணி பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.
பா.ஜனதா கட்சியை மதவாத கட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டால்அதைபோல துரோகம் எதுவும் கிடையாது. என் (ரகுபதி) மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து திருமயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
அவை அனைத்தும் அப்பட்ட மான பொய் என்று 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிரூபித்து தி.மு.க. அந்த தொகுதியில் வெற்றி பெறும். அதற்கான அடித்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பீகார் மாநில வாக்காளர்கள்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்கள் பலர் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பீகாரை சேர்ந்த 7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேரலாம் என்கின்றனர்.அதுபற்றி தேர்தல் ஆணையத்தில் தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற் கொண்டதில் பல்வேறு குளறு படிகள் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
பீகார் மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிற 7 லட்சம் பேருக்கு வாக்குரிமை கொடுத்தால் என்ன ஆகும். தமிழ்நாடு மக்களின் மனநிலை வேறு, பீகார் மாநில வாக்காளர்களின் மனநிலை வேறு. அதனால் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எங்களது கட்சி கொண்டு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.