கடத்தல் பொருளான கடவுள்!

ரூ.30 லட்சம் மதிப்பிலான
அய்ம்பொன் சிலை பறிமுதல்

தூத்துக்குடி, ஆக. 3– தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான அய்ம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தாய்மார்களே, எச்சரிக்கை!

சென்னை, ஆக. 3– சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). எலக்ட்ரீசியனான இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி சங்கீதாவுக்கு பெண் குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

சங்கீதா நேற்று (2.8.2025) அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் 2 மணி நேரம் கழித்து குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே விக்னேசும், சங்கீதாவும் குழந்தையை சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும் போது, “குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, ஏப்பம் விடுவதற்காகவும் செரிமானம் ஆவதற்காகவும் சிறிது நேரம் கழித்து குழந்தையின் முதுகை லேசாக தடவலாம். இது குழந்தை ஏப்பம்விட உதவிகரமாக இருப்பதோடு, பால் வாந்தியெடுப்பதையும் தடுக்கும். இதன்மூலம் கவனகுறைவால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கலாம்” என்றார்.

இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் சைதாப் பேட்டையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *