பி.பி.சியில் கடந்த 5 நாட்களுக்கு முன் வந்த செய்தி. அதன் காணொலியும் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று, இங்கிலாந்தின் லூட்டன் நகரிலிருந்து, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்குச் சென்ற ஈஸி ஜெட் விமானத்தில், நடுவானில் திடீரென ஒருவர் எழுந்தார். கழிவறைக்குச் சென்று திரும்பி வந்து, “அமெரிக்காவுக்கு அழிவு, டிரம்புக்கு அழிவு” என்று கூச்சலிட்டு, “அல்லாஹூ அக்பர்” என்று முழங்குகிறார். (தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக மற்றொரு செய்தி கூறுகிறது). பயணிகள் இருவர் அவரை மடக்கிப்பிடித்து உட்கார வைத்தனர். விமானம் கிளாஸ்கோ விமானநிலையத்தில் தரை இறங்கியதும் ஓடுபாதையில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டது.
விமானம் நின்றதும் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்தனர். பிறகு கூச்சல் எழுப்பிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
விசாரித்ததில், அவர் பெயர் ‘அபய் தேவதாஸ் நாயக்’ என்பதும், 41 வயது நிரம்பிய அவர் அந்நாட்டில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்புகளில் இருப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. விமானப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நோக்கம் என்ன?
அபய் தேவ்வதாஸ் நாயக் என்ற அந்த இந்து மதத்தைச் சேர்ந்த நபர் “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டுக் கொண்டு, விமானத்தில் பிரச்சினை செய்ததன் நோக்கம் என்ன? இஸ்லாமியர்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வைத் தூண்ட வேண்டும் என்பது தான். இந்தியாவில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. தங்கள் வாகனத்தைத் தாங்களே கொளுத்திவிட்டு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுதல், தங்களைத் தாங்களே கடத்திக் கொண்டு தீவிரவாதச் செயல் என்று பரப்புதல், பொது இடங்களில் ஒழுங்கைச் சிதைத்துவிட்டு, இஸ்லாமியர்கள் மீது பழிபோடுதல் என்று ஆயிரக்கணக்கான சதிகள் நடைபெற்றுள்ளன. இவையெல்லாம் வெறும் ஒரு பிரச்சினைக்கான விதைகள் அல்ல; இவற்றைக் கொண்டு கலவரம் நிகழ்த்தவும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டவும் தான் இந்துத்துவவாதிகள் இத்தகைய உத்திகளைக் கையாளுகின்றனர்.
தாக்கப்பட்டவர்
தாக்கியவர்
நேற்று (2.8.2025) இந்தியாவில், மும்பையிலிருந்து கொல்கத்தா கிளம்பிய இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் உடலில் குறைவு ஏற்பட்டு சிரமப்படுவதை அறிந்த விமான பணிப்பெண்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அமர வைத்தனர். அப்படி அழைத்துச் செல்லும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பயணியை, மற்றொரு பயணி கன்னத்தில் அறைந்ததில் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்து (Panic attack) மயக்கம் அடையும் நிலைக்குச் சென்றார். உடனடியாக பிற பயணிகள் அடித்தவரை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இந்த காணொலியும் வெளிவந்துள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணி ஓர் இஸ்லாமியர்.
விமானத்தில் அந்த இஸ்லாமியரை தாக்கிய நபருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், அவர் தங்கள் விமானங்களில் பறப்பதற்கு ஆயுள் தடையும் விதித்துள்ளது.
நாடெங்கும் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு விதைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய வெறுப்பு (hatred) உடல் நலிவுற்ற ஒருவரைக் கூட மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்கச் செய்கிறது.
ஜாதி வெறி, மதவெறி, ஆதிக்க வெறி எனும் நச்சுகள் மனித குலத்தின் அடிப்படை பண்பையே ஒழித்துக் கட்டுகின்றன. அவற்றைத் திட்டமிட்டு உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோத இயக்கங்கள் தீவிரமாக செயலாற்றுகின்றன.
“மதம் மனிதனை மிருக மாக்கும்” என்பது பொய்யில்லை!
– சமா.இளவரசன்