வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது பா.ம.க. போட்டி பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

விழுப்புரம், ஆக. 3- பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமதாஸ் நடத்துக்கும் கூட்டத்துக்கு போட்டியாக ஆக. 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிதாவது:

“பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் ஆக. 9ஆம் தேதி நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் செயல்பாடுகளை
அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

தமிழ்நாடு கல்வித்துறை ஆணை

சென்னை, ஆக.3- தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை நிலை மதிப்பீடுகளின் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பள்ளிகளில் கல்விசார்ந்த செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை நடைமுறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் வேலை புத்தகம், ஆசிரியர்கள் வேலை புத்தகம் பயன்படுத்தும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

மேலும் மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்படவேண்டும். பயிற்சியில் கற்ற அறிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதையும் உறுதி செய்யவேண்டும். இதனை தங்கள் நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயணத் திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான திட்டம்

சென்னை மாநகராட்சி சார்பில்
70 பூங்காக்களில் நூலகம்

சென்னை, ஆக. 3- மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2025 – 2026ஆம் நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.

மாநகராட்சி பூங்காக்களில், ராகவேந்திரா பூங்கா மற்றும் ‘மே’ தின பூங்காவில் சிறிய நூலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மேலும் பல பூங்காக்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 70 பூங்காக்களில் நூலகம் அமைக்க இருப்பதாகவும், இது பொதுமக்களிடையே செய்தித்தாள் மற்றும் புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *