திருச்சி, ஆக.3- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்புக்கள் குறித்த கருத்தரங்கம் மருந்தாக்க வேதியியல் துறையின் சார்பில் 30.072025 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது. பெரியார் மருத்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்ற துவக்கவிழா நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்
ஏ.ஜாபர் அகமது மருந்து கண்டுபிடிப்பில் நவீன முறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விளக்கினார். மேலும் மருந்து கண்டுபிடிப்பில் உள்ள பல்வேறு படிகளை விளக்கி, பெருகிவரும் நோய்களுக்கேற்ப குறைந்த விலையில் தரமான மருந்துகளை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்டுபிடிப்பது ஒவ்வொரு மருந்தாளுநர்களின் கடமை என்றும் கேட்டுக்கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
நிறைவில் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் எம்.கே.எம்.அப்துல் லத்தீஃப் நன் றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.