‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்’’ என்றார் அண்ணா
‘‘சுயமரியாதையைக் காக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, வெளியேறிவிட்டோம்!’’
ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணி அறிவிப்பு!
சற்று காலம் கடந்த முடிவு என்றாலும், இன்றைய காலத்திற்கு உகந்த முடிவு!
தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று அறிக்கை
‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்’’ என்றார் அண்ணா. அதன்படி ‘‘சுயமரியாதையைக் காக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, வெளியேறிவிட்டோம்!’’ என்ற ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணியின் அறிவிப்பு – சற்று காலம் கடந்த முடிவு என்றாலும், ‘இன்றைய காலத்திற்கு உகந்த முடிவு!’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அ.தி.மு.க.வில் மேனாள் முதலமைச்சராகவும், பிறகு துணை முதலமைச்சராகவும், பிறகு எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. ஆன பிறகு, பொறுப்புகளில் இருந்தவரும், ‘ஒ.பி.எஸ்.’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவருமான பண்பாளர் அன்புச் சகோதரர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களும், அவர்கள் தலைமையில் ‘அண்ணா தி.மு.க. உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், பா.ஜ.க. தலைமையில், பிரதமர் மோடி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பைக் கண்டோம்.
‘சுயமரியாதையைக்’ காக்க வெளியேறுகிறோம்!
அதற்கு முதல் நாள் எனது கெழுதகை நண்பரும், பெரியாரிஸ்ட்டும், ஒ.பி.எஸ். அவர்களது அமைப்பின் ஆலோசகருமான ‘பண்ருட்டியார்’ என்று பலராலும் அழைக்கப்படும் தோழர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், ‘‘ஒ.பி.எஸ். தலைமையிலான அணி, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, வெளியேறிவிட்டோம்’’ என்று கூறியுள்ளதோடு, ‘சுயமரியாதையைக்’ காக்க என்று இணைத்துக் கூறி, ஒரு சரியான முடிவெடுத்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.
மீண்டும் சரியான பாதையில்
பயணிக்கின்ற வாய்ப்பு!
பயணிக்கின்ற வாய்ப்பு!
இனி, ஒ.பி.எஸ்.சும், அவர்தம் அமைப்பும், அண்ணா தி.மு.க. உரிமை மீட்பு என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு நலன், உரிமைகளை மீட்டெடுக்க, திராவிடப் பண்பாட்டுக்கும், கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் கபளீகர முயற்சிகளையும் முறியடித்துள்ளது வரவேற்கத்தக்கதே!
மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அப்படியே முழுமையாக விழுங்கிவிட, முழு ஆயத்தமாகி வரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. படையெடுப்பை அறவே முறியடிக்கும் முக்கிய கடமைகளைத் தேர்தல் அரசியல் என்பதிலும் செய்வதன்மூலம், மீண்டும் சரியான பாதையில் பயணிக்கின்ற சிறப்பினைப் பெற வாய்ப்பு அவருக்கும், அவரது அமைப்பினருக்கும் இதன்மூலம் ஏற்படலாம்.
எம்.ஜி.ஆர். எதிர்த்த தி.மு.க.வுடன் நெருங்கலாமா? என்று மலிவாகச் சிலர் கூறக் கூடும்; தி.மு.க.வோடு அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சி நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியுமா? எம்.ஜி.ஆர். அவர்கள்தான் முதல் முயற்சி எடுத்தார் எனது மூலமாக. ஒரிசா முதலமைச்சர் பிஜு பட்நாயக் அடுத்த முயற்சியையும் எடுத்தார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இசைவு தந்தார் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்; எல்லாம் சரியாகப் பயணித்த நிலையில், அப்போதைய டில்லியின் தலை யீட்டால், கடைசிக் கட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ‘‘தி.மு.க. அல்லது அ.தி.மு.க.தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும்’’ என்று கூறியதையும் இப்போதும் நினைவூட்டுகிறோம்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்!
முன்பு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்து டில்லி சென்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியி ருந்தபோது, மண்டைக்காடு கலவரத்தையொட்டி அவருக்கு எதிராகக் கோஷம் போட்ட டில்லி
ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது கையை முறுக்கி, அவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டபோது, அதைக் கண்டு வெகுண்டவர் உடனிருந்த அமைச்சர் தோழர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் என்பதை, இன்றைய மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.சிடம் அ.தி.மு.க.வை அடகு வைத்தவர்களும், இளந்தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டியதொரு பழைய நிகழ்வாகும்.
இன்றைய காலத்திற்கு உகந்த முடிவு!
பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதுபோல், ‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.’’
சற்று காலம் கடந்த முடிவு என்றாலும், இன்றைய காலத்திற்கு உகந்த முடிவு ஆகும் என்று நாளைய வரலாறு பதியக்கூடும்.
‘‘திராவிட மாடல்’’ அரசின் நாயகர், தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் நயத்தக்க அணுகுமுறைகள், நாளும் தி.மு.க. அணியை மேலும் மேலும் வளப்படுத்தி, வலுப்படுத்தி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத இமாலய வெற்றி என்ற கொடியை வானளாவப் பறக்கவிடும் என்பதில் துளியும் அய்யமில்லை.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.8.2025