சென்னை கடற்கரை – வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் திட்டம் ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஆக. 2 சென்னை கடற்கரை – வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில் சேவை

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் சேவை 1997-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், இந்திரா நகர், திருவான்மியூர் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இது விளங்குகிறது. நாள் தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த பறக்கும் ரயில் வழித்தடத்தில், வேளச்சேரி – பரங்கிமலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்க பணிகளும் நடக்கிறது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.60 கோடி வருவாய்

இதுபோக, பறக்கும் ரெயில் சேவை பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ.104 கோடி வரையில் செலவிடப்படுகிறது. ஆனால், ரூ.60 கோடி அளவில் மட் டுமே வருவாய் கிடைத்து வருகிறது.

கடற்கரை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுவதில்லை என்றும், சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்.ஆர்.டி.எஸ்.) எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

மேலும், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து கடந்த மாதம் 16-ஆம் தேதி ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, பறக்கும் ரயில் சேவையின் சொத்து, ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக அரசின் கீழ் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. பறக்கும் ரெயில் சேவையை, மெட்ரோ ரயிலுடன் இணைப்பதன் மூலம் கூடுதல் வசதிகளும், மேம்பட்ட ரயில் சேவையும் பயணிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *