1948-ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24-இல் ஈரோட்டில் நடைபெற்ற தனி (ஸ்பெஷல்) மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் அண்ணா கலந்துகொள்ளாதது பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. ஆனால், ஈரோடு மாநாட்டில் செங்காளைகள் பூட்டப்பட்ட சாரட்டில் அண்ணாவை அமரவைத்து, பேரணியின் முன்னே நடந்துவந்தார் பெரியார். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பங்கேற்ற கடைசி மாநாடு அதுதான்.
காங்கிரஸை விட்டு பெரியார் வெளியேறிய, காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்த திரு.வி.க. ஈரோடு மாநாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக இடியாக முழங்கினார். ‘தூக்குமேடை’ நாடகத்தை நடத்திவிட்டு. வழிச் செலவுக்கு பெரியாரிடம் காசு வாங்குவதற்கு படாத பாடுபட்டேன் என ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் சுவாரஸ்யமாக எழுதியதும் இந்த மாநாட்டைப் பற்றித்தான்.
இப்படி தலைவர்களைப் பற்றி சொல்ல இத்தனை வரலாறு இந்த மாநாட்டிற்குள் புதைந்திருக்கிறது என்றால், பங்கேற்ற அய்ம்பதாயிரம் தொண்டர் களைப் பற்றிய வரலாறுகள் எத்தனை எத்தனை இருக்கும்? எண்ணிப் பார்க்கவே மலைப்பை ஏற்படுத்தும் அந்த வரலாற்றின் ஒரு துளிதான் சாமிநாதன்.
திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள பெருவளப்பூர் இவரது சொந்த ஊர். பெரியார் மீது தீவிரப் பற்றுகொண்டவர். ஈரோடு மாநாட்டிற்குச் செல்ல விரும்பிய இவர், தாய் தனக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு புறப் பட்டார். அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலையை நடந்தே அடைந்தார். சாலையில் போகிற வாகனத்தை நிறுத்தி, சேலம் சென்று, அங்கிருந்து ஈரோட்டுக்குச் செல்வது அவரது திட்டம்.
குச்சி ஒன்றை எடுத்து, அதில் கருப்புத்துணி யைக் கட்டி, சாலையில் வரும் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அப்படியே நின்றது பெரியாரின் வாகனம். ஈரோடு மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெரியார், வழிமறித்த சாமிநாதனிடம் விவரம் கேட்டு, வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். 2 நாள் மாநாட்டிலும் முழுமையாகப் பங்கேற்ற சாமிநாதன், மாநாடு முடிந்ததும், மீண்டும் சென்று பெரியாரிடம் நின்றார். ஊருக்குத் திரும்ப வேண்டுமல்லவா!
திரும்ப வரும்போது பெரிய மூட்டையை கையில் வைத்திருந்ததைப் பார்த்த பெரியார், செல்லும் வழியில் சாமிநாதனிடம் விசாரித்தார். “அய்யா மாநாட்டுக்கு வரும்போது 19 ரூபாய் எடுத்துட்டு வந்தேன். அந்த காசுக்கெல்லாம் புத்தகம் வாங்கியிருக்கிறேன்” என்றார் சாமிநாதன். கால் சவரன் நகை 24 ரூபாய்க்கு விற்ற காலம் அது. இன்றைய மதிப்பில் சுமார் 20,000 ரூபாய். இவ்வளவு பணத்திற்கும் புத்தகம் வாங்கியிருக்கிறாரே என பெரியார் அவரை மனதாரப் பாராட்டினார். மீண்டும் ஊருக்குச் செல்வதற்கு பணம் உள்ளதா? எவ்வளவு செலவாகும்? என்றும் விசாரித்தார் பெரியார். ‘6 அணா தேவைப்படும் அய்யா’ என்று சாமிநாதன் கூறினார். ஆனால், 12 அணா கொடுத்து அனுப்பி வைத்தார் பெரியார்.
பெரியாருடனே சென்று, அவரிடமே வழிச்செலவுக்கும் பணம் வாங்கி அந்த பெரியாரின் பெருந்தொண்டர் சாமிநாதன் பெருவளப்பூரில் செய்த புரட்சி கொஞ்ச நஞ்சமல்ல. சாதி ஆதிக்கத்தை சம்மட்டியால் அடித்த சாமிநாதனின் செயற்கரிய செயல்களால், ‘சாமிநாதபுரம்’ என்றே ஒரு பகுதி பெருவளப்பூரில் நிலைபெற்றிருக்கிறது.
– ர.பிரகாசு
நன்றி ‘முரசொலி’ 1.8.2025