கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக, மேனாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் அளித்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.அய்.டி) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 1995 முதல் 2024 வரை பலரின் உடல்களை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்களைப் புதைக்க, தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 25.7.2025 அன்று விசாரணையைத் தொடங்கிய எஸ்.அய்.டி, புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களில் புதைக்கப்பட்ட உடல்களைத் தேடி வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 6 இடங்களில், ஒரே ஒரு மண்டை ஓடும், 12 எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புகார்தாரர் குறிப்பிட்ட 13 இடங்களில், முதல் 5 இடங்களைத் தோண்டியபோது ஒரே ஒரு மண்டை ஓடு மட்டுமே கிடைத்தது.
மேலும் தோண்டப்பட்ட 6ஆவது இடத்தில், ஒரே உடலது கைகள் மற்றும் கால்கள் என 12 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புகள் தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியின் போது பான் கார்டு, டெபிட் கார்டுகள் கிடைக்கப் பெற்றன.
அந்த உடல்கள் புதைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், எலும்புகளாக மட்டுமே கிடைப்பதால், எலும்புகளைக் கொண்டு ஆணா, பெண்ணா மற்றும் வயதை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று எஸ்.அய்.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல உடல்கள் கிடைக்கும் என புகார்தாரர் உறுதியாகக் கூறுகிறார். அடுத்து தோண்டப்பட உள்ள 7 இடங்களிலும், குறிப்பாக 9ஆவது இடத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைக்கும் என்று புகார்தாரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில், தர்மஸ்தலா மற்றும் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் பதிவான காணாமல் போனவர்கள் குறித்த தரவுகளை எஸ்.அய்.டி சேகரித்து வருகிறது. இந்தப் புகார்களின் அடிப்படையில், தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் அடையாளங்களைக் கண்டறிய எஸ்.அய்.டி தீவிரமாக முனைந்துள்ளது.
தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தடய வியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தடயவியல் ஆய்வறிக்கை மற்றும் பதிவான வழக்குகளின் அடிப் படையில் புதைக்கப்பட்டவர்களின் அடையாளம் கண்டறியப்படும்.
இதெல்லாம் தாமஸ்தலாவில் உள்ள கோயிலை ஒட்டியே நடைபெற்றுள்ளன.
1980களில் இருந்து இது குறித்த வழக்குகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. பல பேர் காணாமல் போனார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் இதன் பின்னணியில் உள்ளது.
நினைக்கவே பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கோயிலில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய ஒரு பெண்ணின் வழியாக இந்தப் பயங்கரங்கள் வெளி வந்துள்ளன.
எல்லாம் ஒரு கோயிலைச் சுற்றியே நடந்திருக் கின்றன. ஏன் காஞ்சிபுரம் வரதராஜன் கோயில் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப் பகலில் வரதராஜன் பெருமாள் முன்னிலையில் படுகொலை செய்யப்படவில்லையா?
கோயில் புனிதமான இடம் என்றும், கோயிலில் குடியிருக்கும் சாமிக்குச் சக்தி உண்டென்றும் அளப்பதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்பதை இப்பொழுதாவது புத்தியைப் பயன்படுத்தி உணர்வார்களா?