முதலமைச்சரிடம் நலம் விசாரித்த டாக்டர் ராமதாஸ்

சென்னை, ஆக.2 தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த சூழலில், முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து மேனாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முதல்-அமைச்சரின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நேரில் சென்று, உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (1.8.2025) அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதுதொடர்பாக, சென்னை அபிராமபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார், குணமடைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.

முதல்-அமைச்சரின்  உடல் நலம் குறித்து விசாரிப்பது வழக்கம்தான், அதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் இருக்கும் இடம்  தைலாபுரம்தான் பா.ம.க.வின் தலைமையகம். பா.ம.க. பொதுக் குழு வருகிற 17-ஆம் தேதி நடைபெறுகிறது. உரிய வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல நகைச்சுவை

சமஸ்கிருதம் அனைத்து மொழிக்கும் தாயாம்
சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

நாக்பூர், ஆக.2 மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டும் என்றால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத மொழியை பயன்படுத்த வேண்டும். மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும்

அனைவரும் சமஸ்கிருத மொழியை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன், ஆனால் என்னால் அதை சரளமாக பேச முடியவில்லை. சமஸ்கிருத மொழியை பாதுகாப்பதும், அதை வளர்ச்சியடைய செய்வதும் நமது பொறுப்பாகும். சமஸ்கிருதம் நமது உணர்வுகளை செழுமையாக்கும். அந்த பழமை வாய்ந்த மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *