அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்த திட்டம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

1 Min Read

சென்னை, ஆக. 2- ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அகழாய்வில் கண் டறியப்பட்ட அரியப் பொருட்களை காட்சிப்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறி உள்ளார்.

அருங்காட்சியகம்

நெல்லை மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். சட்டப்பேரவை விதி 110இன்கீழ், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘வீரம்’ விளைந்த நெல்லை நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் கடந்த 2023ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலமாக கிடைத்த அரியப் பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அகழாய்வுப்
பகுதிகள்

கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2 ஆயிரத்து 617 பொருட்கள் 106 முதுமக்கள் தாழிகள் அகழாய்வு மூலமாக கண்டறியப்பட்டு உள்ளது. திட்டமதிப்பிடு ரூ.3கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டு உள்ளது.

பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களை காட்சிப்படுத்த ஒரு கட்டடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களை காட்சிப்படுத்த 2 கட்டிடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களை காட்சிப்படுத்த 2 கட்டடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டது.பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *