அமெரிக்க வரிவிதிப்பு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பின்னடைவை ஏற்படுத்தும் தென்னிந்திய மில்கள் சங்கம் அறிக்கை

2 Min Read

கோவை, ஆக. 2- “இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘சைமா’ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

சைமா அறிக்கை

இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர். சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசு, ஜவுளி ஏற்றுமதியை தற்போதைய 37 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

இந்த இலக்கை அடைய, இந்திய ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்து நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு

மேலும், அய்ரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் ஆஸ்திரேலியா, அய்க்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஜவுளி தொழிலுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) பேச்சு வார்த்தை நடத்துவதில் இந்தியா நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

இது, அமெரிக்க சந்தையில் இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளின் போட்டித் தன்மையை அதிகரிக்கும். இருப்பினும், அபராத வரிகளுடன் சேர்த்து 25 சதவீத வரி என்ற அமெரிக்காவின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறுகிய காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி பின்னடைவை ஏற்படுத்தும்.

விழாக் காலம் வேகமாக நெருங்கி வருவதால், திடீர் கட்டண அறிவிப்பு இந்தியாவின் கோடை கால ஏற்றுமதி பணிஆணைகளை கடுமையாக பாதிக்கும். இந்தியா, அமெரிக்காவுக்கு 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும்.

பேச்சு வார்த்தை

அமெரிக்க ஆடை இறக்குமதி சந்தையில் இந்தியாவின் பங்கு 2020இல் 4.5 சதவீதத்தில் இருந்து 2024இல் 5.8 சதவீதமாக உயர்ந் துள்ளது. இது ஒரு நேர்மறையான பாதையை பிரதிபலிக்கிறது.

அமெரிக்க சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தற்போது 9.6 சதவீத வரியையும், ஆயத்த ஆடைகளுக்கு 16 சதவீதம் வரை வரியையும் எதிர்கொள்கின்றன. இது போட்டித்தன்மையை கணிசமாக பாதிக்கிறது. போட்டியிடும் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரிகளுடன் ஒப்பிடும்போது இந்த 25 சதவீத வரி ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றினாலும், உண்மையான கவலை என்பது முன்மொழியப்பட்ட அபராதக் கட்டணத்தில் உள்ளது. இதன் தாக்கங்கள் பின்னர்தான் தெளிவாகத் தெரியும்.

எனவே, பிரதமர் மோடி மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் இணைந்து இந்த விவகாரத்தை அமெரிக்க அதிபரிடம் எடுத்துச் சென்று, அபராத விதியை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.

மேலும், அக்டோபர்- நவம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இருதரப்பு பேச்சு வார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *