சென்னை, ஆக.2- ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 14 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு சுற்றுப் பயணத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘வேர்களைத் தேடி’ திட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அயலகத் தமிழ் இளைஞர் களுக்கான ‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை சிங்கப்பூரில் கடந்த 2023இல் நடைபெற்ற தமிழ் கலை, பண்பாட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை அயலக தமிழர்களிடம் பரிமாற்றம் செய்வது, புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் ‘மரபின் வேர்களோடு’ உள்ள தொடர்பை புதுப்பிப்பது ஆகியவையே இதன் நோக்கம்.
அதன்படி, ஆண்டுதோறும் அயலகத்தில் வாழும் 18-30 வயது தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடை, ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.
99 அயலகத்
தமிழ் இளைஞர்கள்
தமிழ் இளைஞர்கள்
அதன்படி, 17 நாடுகளை சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களை கொண்ட 3 கட்ட பயணங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பங்கேற்கும் அயலகத் தமிழ் இளைஞர்கள் சுற்றுலாவை முடித்து நாடு திரும்பியதும், அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு, தமிழர்களின் கலாச்சார பெருமைகளை பரப்புவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டில் 4ஆம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், மொரீஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ஆகிய 14 நாடுகளை சேர்ந்த 99 அயலக தமிழ் இளைஞர்கள் ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சென்னையில் இந்த பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர்களது பயணத்துக்கு தேவையான பொருட்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலக தமிழர் நலன் ஆணையர் வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.