சென்னை, ஆக.2–- 2025-2026ஆம் கல்வியாண் டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.06.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் 31.07.2025 அன்று முடிவடைந்ததால், மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணாக்கர்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, இவ்வாண்டு முதுநிலை மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவினை 01.08.2025 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in <http://www.tngasa.in> என்ற இணையதள முகவரியில் 01.08.2025 முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், 31.07.2025 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும்.
பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்களுக்கான சேர்க்கை நடைபெறும். சேர்க்கைகான விவரம் புலனம் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் அனுப்பப்படும். முதுநிலை மாணாக்கர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 20.08.2025 அன்று முதல் தொடங்கும். என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக
தெலங்கானாவைச் சேர்ந்த டி.வினோத்குமார் பதவி ஏற்பு
சென்னை, ஆக.2- சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் 31.7.2025 அன்று பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வினோத்குமாரை, சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, அவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, டி.வினோத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி டி.வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
புதிய நீதிபதியை வரவேற்று தமிழ்நாடு அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் எம்.பாஸ்கா், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரேவதி, லா அசோசியேஷன் தலைவா் செல்வராஜ் ஆகியோா் புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசினா்.
இந்நிகழ்வில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.வினோத்குமாா் பேசுகையில், பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். எனது பணி சிறக்க அனைவரது முழு ஆதரவும் வேண்டும் என்றாா்.
நீதிபதி டி.வினோத்குமாா் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆகக் குறைந்துள்ளது.
கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு
சென்னை, ஆக.2- சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா தமிழர் பாரம்பரிய முறையில் 1.8.2025 அன்று கொண்டாடப்பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தின்போது, ஒன்பது வகையான தானியங்களின் முளைகளால் நிரம்பிய மண் பானைகளை ஏந்தி, தமிழர் பாரம்பரிய முறைப்படி இசை, நடன நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
ஒட்டுமொத்தத்தில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை நினைவுபடுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில், “மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு, நமது பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதுடன் வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம். இது போன்ற விழாக்கள் வாயிலாக, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நமது கலாச்சாரத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள். 5000 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட தமிழர் பண்பாட்டை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கம் தான் இந்தக் கொண்டாட்டங்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய நிகழ்வுகள், இசை, நடன நிகழ்வுகள் குறித்து மாணவிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.