கீழே கொட்டப்படும் உணவுக்கழிவுகளில் இருந்து பயோ கியாஸ் தயாரித்து சென்னை அரசுப் பள்ளி சாதனை செய்துள்ளது.
பயோ கியாஸ்
‘உயிரி எரிவாயு’ என்று அழைக்கப்படக் கூடிய ‘பயோ-கியாஸ்’, விவசாயம், உணவு, கால்நடை எரு மற்றும் பிற உயிரியல் கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படக் கூடிய ஒன்றாகும். இவ்வகையான எரிவாயு சமையலுக்கு பயன்படுத்துவதோடு, மின்சார உற்பத்தி, வாகன எரிபொருள் உள்ளிட்ட சிலவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப் புறங்களில் சிறிய அளவிலான பயோ கியாஸ் ஆலைகள் இருக்கின்றன. அதன் மூலம் பயோ கியாஸ் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு பள்ளியில் பயோ கியாஸ் தயாரித்து அசத்தியுள்ளனர். சென்னை அடையாறு காமராஜ் அவென்யூவில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளி ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 75 கிலோ கிராம் கொள்ளளவுடன் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த பயோ கியாஸ் ஆலையை நிறுவி இருக்கிறது.
அசத்தல் செய்த அரசுப் பள்ளி
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் இந்த பயோ கியாஸ் தயாரிப்பை தொடங்கிய இந்த பள்ளி, இதுவரை 3 சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டு அளவுக்கு பயோ கியாசை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பயோ-கியோசை கொண்டு அங்குள்ள சத்துணவுக்கூட சமையலுக்கே அந்த பள்ளி பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் சமையல் கியாஸ் பயன்பாடு குறைந்துள்ளது. பள்ளிகளில் கீழே கொட்டப்படும் உணவுக் கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அந்த பள்ளியில் இருந்து கடந்த 7 மாதங்களாக எந்தவொரு உணவுக்கழிவுகளும் வெளியில் கொண்டு செல்லப்படாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாடாக அதனை மாற்றியுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருவான்மியூர் பள்ளியில்…
இதன் தொடர்ச்சியாக தற்போது திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள அரசு பள்ளியிலும் மேலும் ஒரு பயோ கியாஸ் ஆலையை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த பள்ளியிலும் அடையாறு பள்ளியை போல, 75 கிலோ கொள்ளளவுடன் கூடிய ஆலையை அமைக்கலாமா? அல்லது கூடுதல் கொள்ளளவை உருவாக்கலாமா? என்பது குறித்த ஆலோசனை நடக்கிறது. காரணம், இந்த அரசு பள்ளியில் இருந்துதான், சுற்றியுள்ள 18 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்துக்கான உணவுகள் தயாரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.
அப்படியாக பெரிய அளவில் கழிவுகள் இங்கு சேரும் என்பதால், இந்த பள்ளி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் மேலும் சில பள்ளிகளில் மாநகராட்சி முயற்சியால் வரும் நாட்களில் பயோ-கியாஸ் ஆலையை தொடங்கவும் முடிவு செய்யபப்ட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.