நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது புதிய திரைப்படமான ‘சக்தி திருமகன்’ தொடர்பான நிகழ்வுகளில் வெளிப்படுத்திய பகுத்தறிவு சிந்தனைகள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.
‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான ஜூலை 25 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர் வெளிப்படுத்திய செயல்கள் மற்றும் கருத்துகள், மூடநம்பிக்கைகளை உடைக்கும் அவரது துணிச்சலான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றன.
பாரம்பரியமாகவே தமிழ்ச்சமூகத்தில் “ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்றொரு பழமொழி நிலவி வருகிறது.
ஆமையை அபசகுனமாகப் பார்க்கும் இந்தப் பிற்போக்குத்தனமான கருத்தை மறுக்கும் விதமாக, மேடையில் ஒரு ஆமை உருவப் பொம்மைக்கு சால்வை அணிவித்து, மாலையிட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் விஜய் ஆண்டனி. இது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற ‘ஆடி அமாவாசை’ நாளன்று பிரியாணி வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ளார். ஆடி அமாவாசை நாளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது, அசைவம் உண்பது போன்றவற்றைத் தவிர்ப்பது போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கும் நிலையில், விஜய் ஆண்டனியின் இந்தச் செயல், வழக்கமான நம்பிக்கைகளை உடைத்து எறியும் அவரது துணிச்சலைக் காட்டுகிறது.
கடவுளை விட ஏ.அய்.
(செயற்கை நுண்ணறிவு) மேலானது
நிகழ்வில் ஒரு பத்திரிக்கையாளர் ஏ.அய். (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் குறித்து கேட்ட கேள்விக்கு, “நான் அன்றாடம் ஏ.அய்.யுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். கடவுள் நமக்கு பதில் தரமாட்டார். ஏ.அய். நிறைய தருகிறது!” என்று விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, தொழில்நுட்பத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும், அதைப் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் அணுகும் விதத்தையும் வெளிப்படுத்துகிறது. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கும் அவரது பார்வை, நவீன சிந்தனையின் பிரதிபலிப்பாகும்.
இயக்குநர் அருண் பிரபு, “இந்த படம் மக்கள் அரசியலை பேசும் படம்!” என்று கூறியுள்ளது, விஜய் ஆண்டனியின் பகுத்தறிவு சிந்தனைகளுக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது.
சமூக மாற்றத்தையும், மக்கள் நலனையும் மையமாகக் கொண்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடிப்பது, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும், பொது வாழ்விற்கும் இடையே ஒரு தொடர்பிருப்பதை உணர்த்துகிறது. டீசரில் வாகை சந்திரசேகர் கருப்பு உடையில் காட்சியளிப்பதும், படத்தின் கருப்பொருள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம், விஜய் ஆண்டனியின் பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளை மேலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: கி.தளபதிராஜ்