ஜாதி ஒழிப்பு வீரர் தஞ்சை தோழர் பா.இராமலிங்கம்

3 Min Read

தஞ்சாவூர் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர், தோழர் பா.இராமலிங்கம் கடந்த 23.05.2025 நள்ளிரவு தஞ்சையில் இயற்கையெய்தினார். தமிழ்நாடு அரசு. பொதுப்பணித்துறையில் ஆட்சி அலுவலராகப் பணியாற்றி பணி நிறைவெய்தியிருந்தார். 1977 ஜூலை (என்றே நினைவு) குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாமுக்கு அறிவிப்பு வந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா முன்னின்று நடத்தினார். மறைந்த பெரியார் பெருந்தொண்டர் இறையன் பொறுப்பாளர். தமிழ்நாடெங்கனுமிருந்து பலர் மாணவர்களாகக் கலந்து கொண்டார்கள்.

தஞ்சாவூர் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களான அண்மையில் மறைந்த தோழர் பா.இராமலிங்கம், உதவிப் பொறியாளராகப் (பொ.ப.துறையில்) பணியாற்றி பணி நிறைவுபெற்று, தற்போது திருவாரூரில் வசிக்கும் தோழர் வே.தெய்வசிகாமணி, தொழில் நுட்ப அலுவலராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்ற குப்பு.வீரமணி (ஜூனியர்) ஆகியோரை, அப்போதைய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் இரா.இரத்தினகிரி அனுப்பி வைத்தார்.

குற்றாலத்திற்கு பயிற்சி பெறச் சென்ற மாணவர் தோழர் பா.இராமலிங்கம், ஜோதிடம் பற்றியதொரு தலைப்பில் வகுப்பெடுத்து அனைவரையும் கவர்ந்த பயிற்றுநரானார்! பாராட்டவும் பெற்றார்.

துறையில், அனுவலகத்தில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக நடைபெறும் செயல்களை ஒருபோதும் அனுமதிப்பவரில்லை. ஆயுத பூசை, பொங்கல், தீபாவளி வசூல்கள் கூடாது. அலுவலகத்தில் கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. இப்படியாகத் தொடரும். கையூட்டுக்கு 100% ஏதிரானவர், ஆய்வுப் பணிக்காகச் செல்லநேரும் போதும் வீட்டிலிருந்தே உணவை உடன் எடுத்துச் செல்வார்.

அவரது வாழ்விணையர் தோழர் இராசலட்சுமியை ஜாதிமறுப்பு திருமணம் வழி ஏற்றவர். அவர்களும் பொதுப்பணித்துறையிலேயே பணியாற்றி கண்காணிப்பாளராகப் பணி நிறைவெய்தியவர்கள், வாழ்விணையர் இருவரும் அப்பழுக்கற்ற அரசு அலுவலர்களாகத் தொடர்ந்தனர். துறைசார் விதிகளில் துறை போகியவர்கள், வாய்த்த வகையிலெல்லாம் பிறருக்குத் தம்மாலான வகையில் உதவும் நற்பண்பு வாய்க்கப்பெற்றவர்கள்.

மறைந்த தோழர் பா. இராமலிங்கம் தேர்ந்த ஆங்கிலப் புலமையர், துறைசார் விதிகளில் தேர்ச்சி மிக்கவரானபடியால் பலருக்கும் உதவியவர். அரசு விதிகளுக்குப் புறம்பான எதையும் ஏற்காதவர். இவரது நாத்திக இயல்பால் பாதிக்கப்பட்டோரும் உண்டு. பணி நிறைவுக்குப் பின்னரும் பல்வேறு துறையினருக்கும் பதிவு பெறாத வழக்குரைஞராக உதவுவதை இயல்பாகக் கொண்டவர். அவரால் பயன் பெற்றவர்கள் எண்ணற்றோர்.

அத்தகைய தோழர் பா. இராமலிங்கம் 23.05.2025 நள்ளிரவு இயற்கையெய்தினார். தமது உடலைக் கொடையளிக்க ஒரு மாதத்துக்கு முன்னரே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடிதம் எழுதி இசைவும் வேண்டியிருந்தார். தந்தையார் மறைவையறிந்து தஞ்சைக்குப் புறப்படு முன்னர் துயரம் மிக்க வேளையிலும் மறைவுச் செய்தியை என்னுடன் பகிர்ந்ததுடன், அவரது மகள் நீலவேந்தனி, ‘அப்பா விழிக்கொடைக்கு பதிவிட்டிருந்தார்கள். அதனை அவ்வப்போது நினைவூட்டியும் வந்தார்கள். விரைந்து அவரது விருப்பத்தை நிறைவேற்ற உதவுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். அவ்வாறே சில மணி நேரங்களில் அவரது விழிகள் முறைப்படி கொடையாக வழங்கப்பட்டன. அன்று மாலையே தஞ்சாவூர் மருத்தவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடையும் வழங்கப்பட்டது.

தோழர் பா.இராமலிங்கம் அவர்களின் வாழ்விணையர் தோழர் இராசலட்சுமியும், மகள்களும் மட்டுமல்லாது, மருமகன்களும் துணைநின்று தோழர் மறைவையொட்டி எவ்வித சடங்கும், சம்பிரதாயங்களும் நடைபெற்று விடலாகாது என்பதைத் தயக்கமின்றி வலியுறுத்தினர். போராடவும் வேண்டியிருந்தது. ஆனாலும் பிடிவாதமாக வெற்றி பெற்றனர் என்றே கூறலாம். உறவினர்களின் மறுப்போ, தடையோ எள்ளளவும் பொருட்படுத்தப் படவில்லை.

தான் கொண்ட கொள்கையை, தனது வாழ்விணையரிடமும், மகள்களிடமும், மருமகன்களிடமும் தெளிவுற உணர்த்தி, அவர்கள் இசைவுடன், அவர்களே முன்னின்று நிறைவேற்றுமளவுக்கு வழி நடத்தியிருந்த பகுத்தறிவாளர் கழகத் தோழர் பா.இராமலிங்கம் பயிலத்தக்கவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மருமகன்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கியது எண்ணத்தக்கது. நீலவேந்தனி – வினோத், நிஜந்தனி – சாயூஜ்  ஆகிய எல்லோரும் பொறியியல் பட்டதாரிகள். ஜாதி, மொழி கடந்து வாழ்விணையரை ஏற்றவர்கள்.

– குப்பு.வீரமணி, தஞ்சை

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *