சமூக அறிவியல் ஊற்று – 16- அறிய வேண்டிய தந்தை பெரியார்

6 Min Read

புண்ணியக் கதையாம்

ஜாதிகள் இருந்ததுண்டா? நமக்குச் சாதிகள் இருந்ததில்லை, நம் சேர. சோழ பாண்டிய நாயக்க மன்னர்கள் தன்மானமின்றிப் பார்ப்பனர்களை ஆதரித்ததன் பயனாகத்தான் பார்ப்பனர்கள் நம்மிடையே பலஜாதிகளை உண்டாக்கிப் பிரித்து ஏமாற்றிப் பிழைத்தார்கள். புலவர்களும் பொய்க் கதைகளை நம்பிப் புராணங்களை ஆதரித்தனர். கோவிலுக்கு மான்யங்களைக் கொடுத்து அவர்களை மணியடிக்க விட்டதன் விளைவுதான் இந்தச் ஜாதி முறை. ஜாதி இழிவுகளைப் பற்றி நினைத்தது யார்?

தேவடியாள் ஜாதி என்றால் கோபப்படுகிறார்கள். நேற்று வரையில் தேவடியாளாக இருந்தது யார்? சீனாக்காரியா? ரஷ்யாக்காரியா? சூத்திரர் என்பவரில் உள்ளவர்கள் தானே? நாம் கிளர்ச்சி செய்து கட்டியிருந்த தேவதாசிப் பொட்டுகளை அறுத்து அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்த பிறகுதாளே அது ஒழிந்தது? இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறானென்றால் எதனால்? நமக்குப் புத்தியில்லாததாலா அல்லது மானம் இல்லாததாலா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா? மானம் இல்லை வேறு என்ன சமாதானம் சொல்கிறீர்கள்? தேற்றுவரை நாடகம் ஆடியவன் மேடைக்கு வந்தவுடன் “பார்ப்பான் நல்லா சௌக்கியமா இருக்கிறானா? மற்றவர்கள் அவனுக்கு அடிமையாக வேலை செய்கிறார்களர்” என்று தானே கேட்டான்?

நமது ராசாக்களின் யோக்கியதைதான் எப்படி இருந்தது?

வல்லாள மகாராசா என்று ஒரு ராசா இருந்தார். பார்ப்பான் வந்து தனக்குப் பெண் வேண்டும் என்றான். ஊரில் எங்கும் தேடிப்பார்த்தான், கிடைக்கவில்லை. பெண் இல்லை என்று பார்ப்பானிடம் எப்படிச் சொல்வது என்று தன் பெண்டாட்டியைக் கூப்பிட்டுப் போய் அவனுடன் இரு என்றான். இது புண்ணியக் கதையாம். வெட்கம், மானம், இருந்திருந்தால் இதையெல்லாம் கிழித்து நெருப்பு வைத்திருக்க Queen.mon?

இன்று நமது இயக்கம் இல்லா விட்டால் என்ன ஆகும்? சூத்திரன் என்றால் இன்று வெட்கப்படுகிறான். அதுவும் பணக்காரன் வெட்கப்படுவதில்லை அவனுக்குத் தன் நிலை புரிவதில்லை; மற்றவனை மட்ட ஜாதி என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதும். பார்ப்பான் ஒன்று சொன்னால் அதைக் கடவுள் சொன்னதாகக் கருதி கும்பிடுபோடும் பழக்கம் இருந்ததே தவிர, ஏன் என்று கேட்கப் புத்தியிருந்ததா?

ஜாதி நமக்குச் சம்பந்தப்பட்டதல்ல. எப்படி நாம் அதை ஏற்றுக்கொண்டோமோ தெரியவில்லை. “சாதி” என்ற வார்த்தை தமிழ் வார்த்தையல்ல. தமிழில் அதற்குச் சொல்லே கிடையாது. அதெல்லாம் மறுபிறப்பு என்பதைப் புகுத்துவதற்காக ஏற்பட்டது. ஜாதி வருணாசிரம தர்மம் என்ற முறையில் புகுத்தப்பட்டுள்ளது. சாதியின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை நினைத்து இப்போதுதான் வருந்துகிறோம். அதை ஒழிக்கவே நாம் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறோம்.

ஜாதி நமக்குச் சம்பந்தப்பட்டதல்ல. எப்படி நாம் அதை ஏற்றுக்கொண்டோமோ தெரியவில்லை. “சாதி” என்ற வார்த்தை தமிழ் வார்த்தையல்ல. தமிழில் அதற்குச் சொல்லே கிடையாது. அதெல்லாம் மறுபிறப்பு என்பதைப் புகுத்துவதற்காக ஏற்பட்டது. ஜாதி வருணாசிரம தர்மம் என்ற முறையில் புகுத்தப்பட்டுள்ளது. சாதியின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை நினைத்து இப்போதுதான் வருந்துகிறோம். அதை ஒழிக்கவே நாம் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறோம்

25-11-1956 அன்று மயிலாடுதுறையில் தந்தை பெரியார் சொற்பொழிவு:
‘விடுதலை 28-12-1956

அய்நூறு மைல் நடந்தே
ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம்

நண்பர் கி. வீரமணி அவர்கள் திண்டிவனத்தில் படையைச் சந்திக்கப்போவதாக என்னிடத்தில் கூறவே, நானும் சந்திக்க விரும்புவதாகக் கூறினேன். வீரமணி அவர்கள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறினார். இரண்டு நாள் முன்னதாகவே தந்தி கொடுத்துக் கூட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது, இருந்தாலும் இவ்வளவு குறுகிய காலத்தில் வரவேற்புக்கும் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை தஞ்சையிலிருந்து சென்ற மாதம் 23 ஆம் தேதி புறப்பட்டு இன்றுவரை கால்நடையாகவே சுமார் 500 மைல் நடந்து வருகிறது. இப்படையைச் சிதம்பரத்தில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. இப்படை வழிநெடுக ஜாதி ஒழிப்புப் பிரசாரம் செய்து கொண்டே வருகிறது. இதேபோல் பல மாவட்டங்களிலிருந்தும் படைகள் புறப்பட வேண்டும்

ஆச்சாரியார் முதன் மந்திரியாய் இருந்த காலத்தில் குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப்படை ஒன்று புறப்பட்டது புறப்பட்டுச் சென்னை வருவதற்குள் அக் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது.

அதேபோல் இப்படை இரண்டாவதாக ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டு வழி நெடுகிலும் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்து வருகிறது. அன்று சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சிகளால் குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க முடியவில்லை. திராவிடர் கழகத்தாரால் ஒழிக்க முடிந்தது. அதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் சட்டசபைக்குச் சென்று அதைச் செய்வோம் என்று சொல்லுகிறார்களே ஒழிய, சட்டசபையில் போய் ஒன்றும் செய்யமுடியாது என்பதை ருசுப்பிக்கவே (மெய்பிக்கவே) உதாரணமாகச் சொன்னேன். திராவிடர் கழகம் தான் வெளியிலிருந்தே மக்களுக்காகப் பாடுபடுகிறதே தவிர, மற்றவர்கள் எல்லோரும் சட்ட சபையில் சென்று ரூ 150, ரூ 500 என்று சம்பளம் வாங்கமுடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. காரணம் இவர்கள் பேச எழுந்தாலும் சட்டசபைத் தலைவர் கேளாக் காதாக இருந்துவிடுவார்.

எங்கள் கட்சி ஒன்றுதான் இந்நாட்டில் ஜாதி ஒழிய வேண்டும்; திராவிடநாடு பிரிய வேண்டும். வட நாட்டான் ஒழிய வேண்டும்: கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம் முதலியவைகள் ஒழிய வேண்டும் என்று பாடுபடுகிறது. மற்றக் கட்சிக்காரர்கள் ஓட்டு வாங்குவதற்காக அழகாகப் பேசுவார்கள். மற்றும் இந்நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் கட்டுப்பாடாக எங்கள் நடவடிக்கைகளைப்பற்றி ஒன்றும் எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும் எழுதுவது ஏதோ மூலையில் யாருக்கும் தெரியாமலிருக்கும்படியான இடத்தில் பிரசுரிப்பார்கள். மற்றும் இதுவரை ஜாதியொழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் 300 பேருக்கு மேல் கைது செய்து தண்டிக்கப்பட்டவர்கள். அதைப் பற்றி இதுவரை எந்த எதிர்க் கட்சியும் ஒன்றும் கேட்டது கிடையாது. திராவிடர் கழகம்தான் பார்ப்பனர். சர்க்கார். விளம்பரம், பத்திரிகை முதலியவர்களின் தயவு இல்லாமல் வாழ்ந்து வருகிறது.

இவ்வாண்டு போராட்டமாக 1 ஜாதி ஒழிப்புப் போராட்டம் 2 கோவிலில் பார்ப்பான் பூசை செய்யாமல், தமிழன் பூசை செய்ய வேண்டியது – ஆகிய இரண்டு போராட்டங்கள் நடத்துவதாக இருக்கிறோம். முதல் போராட்டம் தான் ஜாதி ஒழிப்புப் போராட்டமாகச் சென்னையில் நடக்கும் ஓட்டல் மறியல் கிளர்ச்சி இந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை ஒரு வருடம் நடத்தலாம் என்று எண்ணியுள்ளேன்.

(25.07.1957 அன்று திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு) – ‘விடுதலை. 27.7.1957

இரண்டாயிரம் ஆண்டுகாலமாக
எவரும் செய்யாதத் தொண்டு

காந்தி இத்தனை பாதாம் பருப்பு என்று கணக்குப் போட்டு சாப்பிட்டார். 120 ஆண்டு இருப்பேன் என்றார். பார்ப்பானன் நினைத்த மாத்திரத்தில் சுட்டுக் கொன்று விட்டான்! அதுபோல என் நிலை ஆனால்தான் என்ன கண்டோம்? எத்தனை ஆபத்து வருகிறது! அதையெல்லாம் மீறி இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பேனோ யார் கண்டார்கள்? உடம்பைப் பொறுத்த வரையில் நன்றாகயிருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள். மக்கள் அன்பைப் பார்க்கும் போது கொஞ்சகாலம் இருக்கலாம் என்ற உற்சாகம் இருக்கிறது.

என் வாழ்வில் எனக்குத் தனி ருசி! ஏன் தனி ருசி என்றால் யாரும் இதுவரையில் இந்த 2000 ஆண்டுகாலமாகச் செய்யாத தொண்டைச் செய்வதில்தான் அந்த ருசி! எனக்கு முன்பு பலர் செய்தார்கள். ஆனால் அதனாலேயே பார்ப்பனர்கள் ஒழித்து விட்டார்கள்! பல மகாத்மாக்கள், ரிஷிகள், விவேகானந்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். எத்தனை ஆழ்வார்கள்! எத்தனை நாயன்மார்கள்! எவரும் ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்ல வில்லையே? வள்ளுவர், அவ்வை, வள்ளலார் ராமலிங்கர் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால் சாடையாகத்தான் சொல்லி இருப்பார்கள்! வெளிப்படையாச் சொல்லவில்லை.

ஜாதி ஒழிப்பில் நான் மேலே போய்விட்டேன். ஜாதிக்கு ஆதாரமான மதம் ஒழியவேண்டும்: சாஸ்திரம் ஒழியவேண்டும்; இராமன், கிருஷ்ணன் ஒழியவேண்டும்; வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றும் படி செய்த காந்தியையே நெருப்பு வைக்க வேண்டும் என்கிற அளவுக்கு மேலே போகிறேன். எவரும் நடுங்கும்படியான காரியத்தைச் செய்கிறோம். அப்படியொன்றும் உபயோகமில்லாத தொண்டாக இல்லை என்று எண்ணும்போது ஒரு திருப்தி ஏற்படுகிறது. உங்கள் அன்பான இந்த அன்பளிப்புகளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

(29.9.1957 இல் சேலம் எடப்பாடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

– ‘விடுதலை 7.10.1957

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *