அன்பிற்குரிய,வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம்.
‘‘ஆசிரியர் அய்யா அவர்களுக்குக் காதில் அறுவைச் சிகிச்சை செய்தபின் உடல் நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பிறகு இல்லம் திரும்புவார்’’ என்ற செய்தியை 28.07.2025 அன்று ‘விடுதலை’யில் படித்த பின்பு நாங்கள் சற்று ஆறுதல் அடைகிறோம்.
15 நாட்களுக்கு மேலாக ஆசிரியர் அய்யா அவர்கள் காதில் ஏற்பட்ட நோய்த் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்ததிலிருந்து சற்று வருத்ததுடன் இருந்து வந்தோம். அதே நேரத்தில் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளை ‘விடுதலை’யில் படித்து தங்களை நேரில் சந்தித்து உரையாடுவதைக் கேட்பது போன்ற உணர்வை பெற்று வந்தோம். குறிப்பாக பெரியார் குடும்ப உறவுகளுக்காக விடுதலையில் 23.07.2025 அன்று ‘‘கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!’’ என்ற தங்களின் தெளிவான அறிக்கையை படித்து சற்று ஆறுதல் அடைந்தோம். தற்போது அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து அய்யா அவர்கள் நலம் பெற்று வருகிறார் என்ற செய்தி எங்களுக்கு மன அமைதியை தருகிறது.
ஆசிரியர் அய்யா அவர்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு புதிய தகவலை மனிதநேயப் பார்வையில், பகுத்தறிவின் பார்வையில் எப்போதும் எடுத்துச் சொல்வீர்கள் அல்லது அறிக்கையில் குறிப்பிடுவீர்கள். அதே போன்று இப்போது மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும். அங்கு உள்ள நோயாளிகளை (Patients) நோயாளிகள் என்ற சொல்லை கூறி அழைத்து அவர்களை மனரீதியில் மேலும் நம்பிக்கையின்மை ஏற்படுத்துவதற்கு மாற்றாக, ‘‘மருத்துவ பயனாளிகள்’’ (Medical Beneficiaries) என்ற புதிய சொல்லை பயன்படுத்த தமிழ் நாடு முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய செய்தியை கண்டு வியந்தோம்; மகிழ்ந்தோம்; ஒரு புதிய மனிதநேய சொல்லை அறிந்தோம். அதற்காக அய்யா அவர்களுக்கு நன்றி.
ஆசிரியர் அய்யா அவர்கள் முழுமையாக குணமடைந்து, உடல் நலம் பெற்று விரைவில் இல்லம் திரும்பி முழு ஓய்வு எடுத்து, எப்போதும் போல் பெரியார் பணியினை தொடர்ந்திட வேண்டும் என்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக பெரிதும் விழைகிறோம்.
– க.பூபாலன்
தலைவர்,
பெரியார் சமூக சேவை மன்றம், சிங்கப்பூர்.