தேசியக் கல்வித் திட்டத்தின் தோல்வி!

3 Min Read

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு சமர்ப்பித்த தரவுகளின்படி, கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்ந்த புதிய மாணவர்களின் எண்ணிக்கை 2024–2025 ஆம் ஆண்டில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

* 2020-2021: 1.95 லட்சம் புதிய மாணவர்கள், 2021-2022: 1.83 லட்சம் புதிய மாணவர்கள், 2022-2023: 1.58 லட்சம் புதிய மாணவர்கள், 2023-2024: 1.75 லட்சம் புதிய மாணவர்கள்.

* 2024-2025: 1.39 லட்சம் புதிய மாணவர்கள் (கடும் சரிவு)

புதிய கல்வித் திட்டம் அறிமுகத்திற்குமுன்

2020–2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 13.88 லட்சமாக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை 2024-2025 ஆம் ஆண்டில் 13.5 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்தத் தகவல்களை பி.கே. பார்த்தசாரதி மற்றும் ஆர்.சுதா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.

பள்ளிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு: நாட்டில் மொத்தம் 1,280 கேந்திரிய வித்யாலயாக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் இடமாற்றத்திற்கு உட்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக செயல்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்களைத் திறக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தபோதும், மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாடு முழுவதும் சிவில்/பாதுகாப்புத் துறையின் கீழ் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்களைத் திறக்கவும், கருநாடகாவின் சிவமோகாவில் ஏற்ெகனவே உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயாவில் அனைத்து வகுப்புகளிலும் இரண்டு கூடுதல் பிரிவுகளைச் சேர்த்து விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 5,872.08 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தர்மேந்திர பிரதான் வழங்கிய தரவுகளின்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு (கே.வி.எஸ்) ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டில் நிலையான உயர்வைக் கண்டுள்ளது. இது 2020–2021 இல் ரூ. 6,437.68 கோடியிலிருந்து 2024–2025 இல் ரூ. 8,727 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பி.எம். போஷன் (PMPOSHAN  மதிய உணவு) திட்டத்தின் கீழ் செயல்திறன், திட்டம் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களு டனான சந்திப்புகளின் போது, 2024–2025 ஆம் ஆண்டில் 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், அரசுப் பள்ளி சேர்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கல்வி அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அதற்கான காரணங் களைக் கண்டறிந்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அதிக நிதியை ஒதுக்கியும், அப்பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரிப்புக்குப் பதிலாகக் குறைந்து வருவது ஏன்?

ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் தேசிய கல்வித் திட்டத்தின் குறைபாடுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.

இந்தப் பள்ளிகளில் பெரும்பாலோர் ஒன்றிய அரசின் துறைகளில் படிப்போர் வீட்டுப் பிள்ளைகள்தாம். மாநிலம் விட்டு மாநிலம் மாற்றலாவதால், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் கேந்திர வித்யாலயாக்கள்.

பெற்றோர்கள் நல்ல அளவு கல்வி கற்றவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்து வருவது ஏன்?

கல்விக்கே சம்பந்தம் இல்லாதவர்களால் தயாரிக்கப் பட்ட தேசிய கல்வித் திட்டம் அல்லவா! அதனுடைய விளைவுதான் இது.

கல்வித் துறை அமைச்சரே நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளார் என்பதால் வீண் பிடிவாதம் பிடிக்காமல் தேசிய கல்வித் திட்டத்தைப் பின் வாங்குவதுதான் அறிவு நாணயம்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *