தமிழ்நாட்டின் சிறப்பு உயர் மருத்துவப் படிப்பு இடங்களை உடனடியாக நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட முக்கியமான மருத்துவக் கல்லூரிகளிலேயே 24 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் (DM/MCh படிப்புகள்) இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஒன்றிய அரசின் நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பர்சண்டைல் கட்-ஆப் என்ற அளவுகோல் வரைக்கும் வைத்து மூன்றாம் கவுன்சிலிங் நடத்திய பிறகும் கூட இன்னும் 24 இடங்கள் நிரப்பப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ள இடங்களை, பணியில் உள்ள மருத்துவர்களைத் (In- Service Doctors) தேர்ந்தெடுத்து நிரப்புவதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஒன்றிய அரசின் மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநருக்குக் (DGHS) கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். உயர் மருத்துவப் படிப்பு என்பது கல்லூரி இடங்களை நிரப்புவது என்றால் மட்டும் பிரச்சினையில்லை; அவை தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
முழுமையாகத் தமிழ்நாடு அரசாலேயே நிரப்பப்பட்டு வந்த இடங்களை 2016-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பறித்தது. அதில் 50% பணியில் உள்ள மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் சட்டப் போராட்டத்தின் மூலம் திரும்பப் பெற்றிருக்கிறோம். நீட்டின் பெயரால் அங்கேயும் தடைக் கற்களை ஒன்றிய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. தொலைநோக்கோடு உருவாக்கப்பட்ட சிறப்பு உயர் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை வீணடித்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் உரிமையையும், சமூகநீதியையும், நல்வாழ்வுக்கான கட்டமைப்புகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.8.2025