நமது கழகம் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக காங்கிரசை ஆதரிக்கும் பணியை முக்கியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்ததன் காரணமாக நம் கழகப் பணியாகிய பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு முழு நேரமும் பயன்படுத்தப்படாமல் பகுதி அளவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
என்றாலும் நம் காங்கிரஸ் ஆதரிப்புப் பணி நல்ல அளவுக்கு பயன்பட்டு வந்த காரணத்தால் கழகப் பணியின் முக்கிய பாகமாகிய சமுதாய நலக் கொள்கை காங்கிரசின் பணியால் நல்ல அளவுக்கு நிறைவேற்றப்பட்டு பயன்பட்டு வருகிறதென்றே சொல்லலாம்.
கல்வித் துறையில் நமது சமுதாயம் நல்லவண்ணம் முன்னேறி வருகிறது. பகுத்தறிவுத் துறையும் வளர்ச்சி அடைந்தே வருகிறது.
இந்த இரண்டின் பயனாய் மக்கள் அடைந்து வரும் முன்னேற்றத்தைத் தடுக்க, பார்ப்பனர் இன்று இமாலய முயற்சி செய்து வருகிறார்கள். நம் மக்களில் ஒரு கூட்டத்தினர் முட்டாள்தனத்தாலும், கூலிக்கு ஆகவும் பார்ப்பனர் வயப்பட்டு பார்ப்பனரின் தடுப்பு வேலைக்கு நல்ல உதவி செய்து வருகிறார்கள். பார்ப்பனரின் இந்த முயற்சி நமக்குச் சவால் விடுவது போலவே நடத்தப்பட்டு வருகிறது.
இப்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் கடவுள் பிரச்சாரம், கடவுள்களின் கதைகளாகிய இராமாயணம், பாரதம், புராணம் ஆகியவைகளின் பிரச்சாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிரச்சாரம், இவர்களது பக்திப் பாடல்கள் என்னும் தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலியவைகளின் பிரச்சாரம். கோவில்கள் விளம்பரம் திருப்பணிப் பிரச்சாரம், உற்சவப் பிரச்சாரம் முதலியவைகள் பார்ப்பனர்களால் தீவிரமாக செய்து வரப்படுகின்றன.
இவ்வளவு காரியங்களும் மக்களுக்கு மூடபக்தியை உண் டாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக ஆக்கவே செய்து வரப்படுகின்றன. அரசாங்கம் பார்ப்பனரின் விஷமத்தனமான எதிர்ப்பினாலும், பாமர மக்களை எதிரிகள் வசப்படாமல் பாதுகாத்து தங்கள் வசத்தில் வைக்க வேண்டிய அவசியத்தாலும் மேற்கண்ட துறைகளில் எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதோடு சில விஷயங்களில் ஆதரவு காட்ட வேண்டியதாகவும் இருந்து வருகிறது.
ஆகவே, இந்த நிலையில் நாம் முன்னிலும் அதிகமாக பகுத் தறிவுப் பிரச்சாரத்தை (அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், கடவுள் கதைகள், கோவில்கள், உற்சவங்கள் முதலிய வற்றின் வண்டவாளங்களை வெளியாக்கும் பிரச்சாரத்தை) தீவிரமாகச் செய்ய வேண்டி இருக்கிறது.
இதற்கு ஆக பகுத்தறிவுப் படை என்பதாக சுமார் 50 பேர் கொண்ட படை ஒன்றைத் திரட்டி அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு நல்ல பயிற்சி கொடுத்து, நாடு முழுதும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமென்று கருதுகிறேன்.
சென்னையில் பார்ப்பனர்கள் திரு. கிருபானந்தவாரியைக் கொண்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது மதுரையில் தேவஸ்தானக் கமிட்டியார் தங்கள் செலவில் உணவு முதலியன கொடுத்து பல பிள்ளைகளுக்குத் திருப்பாவை, திரு வெம்பாவை, பிரபந்தம் முதலிய பக்திப் பாடல்களில் பயிற்சிப் பள்ளி நடத்தப் போவதாக விளம்பரப் படுத்தப்பட்டு பிள்ளைகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த முயற்சியை மதக்காரர்கள் – பார்ப்பனர்கள் நமக்கு சவால் விடும் முயற்சி என்றே கருதுகிறேன்.
ஆகவே, நாம் துவக்கும் பகுத்தறிவுப் பிரச்சாரப் படை பயிற்சிப் பள்ளியைத் திருச்சியில் நடத்தலாம் என்றே கருதுகிறேன். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் நடத்தினால் குறைந்தது 50 பிள்ளைகளுக்கு மாதம் ரூ. 1,500 வீதம் 3,000 ரூபாய் செலவாகலாம். படையில் சேர்ந்து பயிற்சி பெற வரும் பிள்ளைகள் பகுதிச் செலவை ஒப்புக்கொள்ள எதிர் பார்க்கப்படுகிறது.
இப்பயிற்சிப் படைக்கு (பின்னால் தெரிவிக்கப்படும்) ஒருவரை தலைவராகவும், திரு. ஆனைமுத்து அவர்களை நிர்வாகியாகவும் இருக்கும்படி வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
இப்பள்ளி திருச்சியில் நடத்தப்படுவதானால் திருச்சி தென்னூர் பட்டாபிராம பிள்ளை தெருவில் உள்ள கழகக் கட்டடமாகிய மாளிகையில் நடத்தப்படும்.
ஒரு சமயம் ஏற்காட்டில் சுமார் 10 நாட்களுக்கு நடத்தப்பட நேர்ந்ததால் ஏற்காடு நடிகவேள் ராதா அவர்களது மாளிகையில் நடத்தப்படும். பிறகு ஒரு மாதத்தில் மீதி 20 நாட்களுக்குத் திருச்சியில் நடத்தப்படும்.
பயிற்சி பெற ஆவலுள்ள மாணவர்கள் இது பார்த்தவுடன் தங்களது தகுதி, படிப்பு, செலவை ஒப்புக் கொள்ளும் விவரம் முதலியவைகளுடன் ஆங்காங்குள்ள கழக முக்கியஸ்தரிடம் கையெழுத்து வாங்கி உடனே திருச்சி பெரியார் மாளிகைக்கு விண்ணப்பம் போடவும்.
விலாசம்:
திரு. ஆனைமுத்து,
பகுத்தறிவுப் பிரச்சாரப் படை பயிற்சிப் பள்ளி,
நிர்வாகி,
பெரியார் மாளிகை, திருச்சி.
தலையங்கம் (‘விடுதலை’ 7.5.1964)