வன்முறையின் மறுபெயர்தான் சங்பரிவார் வகையறாக்கள்!

3 Min Read

ஹிந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி அறிவுறுத்தி உள்ளார். இதை உடன் வைத்திருக்காத இந்துக்களை அடித்து உதைக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மதுரா நகரில் உள்ள பிரிஜ் தாம் எனும் மடத்தின் தலைவர் யுவராஜ் மஹராஜ் ஹிந்து சேனா என்ற அமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ஒரு காட்சிப் பதிவு வட மாநிலங்களில் சமூகவலைதளங்களில் வைர லாகி வருகிறது. இதில் துறவியான யுவராஜ் மஹராஜ் கூறும்போது, ‘ஹிந்துக்கள் அனைவரும் தம்முடன் துப்பாக்கி அல்லது வாள் வைத்திருக்க வேண்டும். இதை வைத்திருக்காதவர்களை நான் ஒரு ஹிந்துவாகவே கருத மாட்டேன். அப்படி வைத்திருக்காமல் இருக்கும் கோழை ஹிந்துக்களை நான் அடித்து உதைக்கப் போகிறேன். அவர்கள் ஹிந்துமதத்தில் இருக்கவே கூடாது.’ எனக் குறிப்பிடுகிறார். இதே காட்சிப் பதிவு தேவைப்படுவோர் வாள்களை தன்னிடம் விலைக்குப் பெறலாம் எனவும் துறவி யுவராஜ் அறிவித்துள்ளார். இதன் விலை ரூ.1,250 எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு சலுகையாக ரூ.800 விலையில் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது உருவம் அந்த காட்சிப் பதிவில் சற்று தெளிவாகத் தெரிய வில்லை. இதனால், அதை சில செய்தியாளர்கள் அந்த துறவியை நேரில் சந்தித்து கேட்டிருந்தனர். இவர்களிடம் அந்த காட்சிப் பதிவில் இருப்பது தாம் தான் என உறுதிப்படுத்திய துறவி யுவராஜ், இதற்காக தன்னை கைது செய்ய எவருக்கும் துணிவு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துறவி யுவராஜ் மீது வந்த சில புகார்களால், மதுரா காவல்துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது.  விசாரணையில் தவறு நடந்திருப்பதாக உறுதி செய்யப் பட்டால் அதன் மீது யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மாவட்ட எஸ்.எஸ்.பி.யான டிரைகன் பைஸன் தெரிவித்துள்ளார். 

இதுபோல், சர்ச்சையாகப் பேசி காவல்துறை நடவடிக்கைகளில் சிக்குவது இந்த துறவி யுவராஜுக்கு புதிதல்ல. கடந்த டிசம்பரில் இவர் டில்லியின் விவேக் விஹார் பகுதியில் 40 வாள்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், ’மதுராவில் கிருஷ்ணஜென்ம பூமி கோயிலின் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பவருக்கு இந்த வாள்கள் விற்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். சிறையிலிருந்த துறவி யுவராஜுக்கு சில நாட்களுக்கு பின் பிணை அளிக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் நவம்பரிலும் ஷாயி ஈத்கா மசூதி குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.-

மத்தியப்பிரதேசத்தைச்சேர்ந்த திரேந்திர என்ற சாமியாரும் ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள், அப்படி இல்லாதவர்கள் என்னிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று பேசி இருந்தார், அதனைத் தொடர்ந்து இந்தச்சாமி யாரும் ‘ஆயுதம்’ விற்பனைக்கு என்று விளம்பரப்படுத்தி வருகிறார். 

அரித்துவாரில் கடந்த ஆண்டு நடந்த சாமியார்கள் மாநாட்டில் ஹிந்து நாடாக மாறவேண்டுமென்றால் அது வெறும் பேச்சுவார்த்தையில் நடக்காது; ஹிந்துக்கள் அனைவரும் ஆயுதம் எடுத்தால் மட்டுமே முடியும் என்று பேசி இருந்த நிலையில் வடக்கே சாமியார்கள் ஆயு தங்களை விற்பனைக்கு வைக்கத்துவங்கி விட்டனர்.

மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பிரக்யாசிங் தாக்கூர் என்பவர் பிஜேபி சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.பி.யாகவும் ஆகி இருக்கிறார்.

இந்துக்கள் ஒவ்வொருவர் கையிலும் கூர்மையான கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே!

‘முதுபெரும் பிஜேபி தலைவரான  அத்வானியே ரத யாத்திரை என்ற பெயரால் ரத்த யாத்திரை நடத்த வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நாடெங் கும் திரிசூலத்தை வழங்குவதுண்டே! ஒரு சூலம் கிறித்தவர் களையும், இன்னொரு சூலம் இஸ்லாமியர் களையும் மற்றொரு சூலம் மதச் சார்பின்மைப் பேசுபவர்களையும் பதம் பார்க்க வேண்டும் என்று கூறி வருவதில்லையா?

சுருக்கமாகச் சொன்னால் வன்முறையின் மறு பெயர்தான்  ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களும், பிஜேபி காவிக் கூட்டமும்! எச்சரிக்கை!’  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *