(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
“குமரமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கிறோம்”
என்ற பெயரில் பக்தர்களிடம் கட்டணக் கொள்ளையா?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். பொதுவுடைமைவாதிகள் வர்க் கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது என்பார்கள். கோயில் களில் நடக்கும் திருமணங்கள் அங்குள்ள புரோகிதர் களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன என்ற போதிலும் அந்த புரோகிதர்களால் திருமண வீட்டார் எப்படி யெல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதற்கு இங் குள்ள கோயில் திருமணத்தில் புரோகிதர்கள் வசூலித்த தொகையே சான்றாக அமைந்திருக்கிறது.
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல் லும் வழியில் உள்ளது குமரமலை முருகன் கோவில். இந்தக் கோவிலுக்கென்று தல வரலாறு என்று ஒன்று இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தக் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குன்றிருக்கும் இட மெல்லாம் குமரன் வீற்றிருப்பான் என்ற பக்தி வாக் கியத்திற்கேற்ப இந்தக் குன்றின் மீதும் முருகன் கோவில் கட்டப்பெற்று மக்களால் வழிபடப் பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மற்ற முருகன் கோவில்களில் நடக் கும் அத்தனை வைபவங்களும் இந்தக் கோவிலிலும் நடக்கும். கார்த்திகைத் தீபமும் மாசி மகமும் பங்குனி உத்திரமும் சித்திரை முதல்நாளும், முழுநிலவும் வைகாசி விசாகமும் ஆனித் திருமஞ்சனமும் உள் ளிட்ட அனைத்து மாதங்களிலும் முக்கிய நாட்களின் விழாக்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொண்டால் மணமக்கள் நலமுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக் கையும் இந்தப் பகுதியில் இருப்பதால் பல ஊர்களில் இருந்தும் திருமண வீட்டார் இந்தக் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 25.5.2023 ஆம் தேதியன்று இந்தக் கோவிலில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதாகவும் திருமணம் ஒன்றிற்கு திருமணம் செய்து வைக்கும் கோயில் குருக்கள் ரூபாய் 3500வரை வசூலிப்பதாகவும் அவ்வாறு வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீது தருவதில்லை எனவும் அந்தக் கோவிலில் அர்ச்சனை, சிறப்பு தரிசனம், பால்குடம் எடுத்தல், பிள்ளை தத்துக் கொடுத்தல், அபிஷேகம், காது குத்து என ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள விளம்பரப் பலகை யில் எழுதி வைக்கப்பட்டுள்ள நிலையில் திருமணத் திற்கு மட்டும் எந்தத் தொகையும் எழுதாமல் விட்டி ருப்பதாகவும் அதைப் பயன்படுத்திக் கொண்டு 3500 ரூபாய் வரை திருமண வீட்டாரிடம் வசூலிப்பதாகவும் புதுக்கோட்டை தரணி ரமேஷ் என்பவர் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார்.
இது குறித்து ரமேசிடம் கேட்டபோது திருமண முறைகள் என்பது முந்தைய தலைமுறைகளில் உள்ள பழக்க வழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறி விட்டது. தந்தை பெரியார் அவர்கள் திருமண முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் பின்னாளில் சட்டமாக இயற்றப் பட்டு விட்டன என்பது வரலாறு. ஆனால் இன்னும் சமூகத் தில் இருக்கும் பழக்க வழக்கங்கள், பண்பாட்டு முறை கள், உறவு முறைகளுக்குள் இருக்கும் வரையறைகள், அதை மீற முடியாமல் தவிக்கும் உறவும் நட்பும் என மற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நேரத்தில்தான் கோவில் திருமணங்கள் நடந்து விடுகின்றன.
திருமண மண்டபங்கள் வைத்திருப்பவர்கள் திருமண வீட்டாரின் பொருளாதாரத்திற்கேற்ப வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். அதனால் வீடுகளில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன. திருமண வீட்டார் தங்களுக்குத் தேவைப் படும் வசதி எந்த மண்டபத்தில் கிடைக்கிறதோ அதில் தங்களது திருமணத்தை வைத்துக் கொள்கிறார்கள். அதே போல் தங்களது பொருளாதாரத்திற்கு எந்த மண்டபம் ஒத்து வருகிறதோ அதைப் பிடித்துக் கொள் கிறார்கள்.
எந்தவொரு ஒலிபெருக்கி வைத்திருப்பவரும் தனது நிறுவனத்தில் வந்து திருமணங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை. எந்தவொரு ஒளிப்பட நிறுவனத்தினரும் தங்களது ஸ்டுடியோவில் வந்து திருமணங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை. எந்த ஒரு சமையல் கலைஞரும் தனது வீட்டில் வந்து திருமணத்தை வைத்துக் கொள் ளுங்கள் என்று சொல்வதில்லை. திருமண வீட்டார் சொல்லும் இடத்திற்கு, அவர்கள் அழைக்கும் இடத் திற்குச் சென்று அவர்கள் பணிகளைச் செய்து முடிக் கிறார்கள்.
ஆனால் யாருடைய சொல்பேச்சையோ கேட்டுக் கொண்டு கோவில்களில் திருமணங்கள் செய்து கொள்ளச் செல்கிறார்கள் அப்பாவிகள். அவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும் இருக்கலாம். எளிய முறையில் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர் களாகவும் இருக்கலாம். ஆனால் கோவிலில் திருமணம் செய்து கொண்டால் அய்யனின், அப்பனின், அம்பா ளின், அருள்நிறை கிடைக்கும், என்றும் கோவில் திருமணம் செய்து கொண்டால் செலவு குறையும் என்றும் எங்கோ மூளைச்சலவை செய்யப் பட்டுத்தான் கோவில்களில் குவிகிறார்கள். அது ஜாதகமாக இருக்கலாம். சோதிடமாக இருக்கலாம். அது வேறு.
ஆனால் குமரமலையில் நடக்கும் திருமணங்க ளுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி இங்குள்ள குருக்கள் ரூபாய் 3500வரை வசூலிக்கிறார்கள். அதைக் கண்டு பலரும் பொருமுகிறார்கள். நான் எனது நண்ப ரின் திருமணத்திற்காக 25.5.2023அன்று சென்றிருந் தேன். கிட்டத்தட்ட அன்று மட்டும் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்தத் திருமணங்களை அங்குள்ள குருக்கள் முறையாக மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. ஆனால் பல காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு திருமணத்திலும் அந்தந்தத் திருமண வீட்டாரிடம் சில் லறை சில்லறையாக 3500வரை கறந்ததைக் கண்ணாரக் கண்டுதான் மனம் பொறுக்காமல் சமூக வலை தளங்களில் பதிவிட்டேன்.
பத்து நிமிடம்கூட செய்யாத ஒரு வேலைக்கு 3500 ரூபாய் ஊதியம் என்றால் அதைக் கொடுத்து விட்டு ஏமாந்து நிற்பவர் என்ன பெரும் பணக்காரரா? தினமும் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் கடவுளை நம்பி வந்து கல்யாணத்திற்கு நிற்கும்போது அவர்களது ஏழ்மையையும் அறியாமையையும் பக்தியையும் பயன் படுத்திக் கொண்டு பணம் பறிப்பதை இந்து அறநிலையத்துறை எப்படித்தான் அனுமதிக்கிறது” என்றார் கோபத்துடன்.
இது குறித்து குமரமலை கோவிலில் அர்ச்சகராக இருக்கும் வைரவமூர்த்தியிடம் கேட்டபோது “நான் மட்டுமல்ல எனது அண்ணன்களும் இந்தக் கோவிலில்தான் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு மொத்தம் 1250-ரூபாய்தான் மாத ஊதியம். அதை வைத்துக் கொண்டுதான் குடும்பம் நடத்துகிறோம். முதல் பத்துநாள் மூத்த அண்ணன் பூஜை செய்கிறார். அடுத்த பத்து நாள் இன்னொரு அண்ணன். கடைசி பத்து நாள் நான் என்று முறை வைத்து பூஜைகள் செய்து வருகிறோம். அரசு கொடுக்கும் இந்த ஊதியத்தைப் பிரித்துக் கொள்வோம். பக்தர்கள் தரும் காணிக்கையை வைத்துக் கொள்வோம். திருமணத் திற்குத் தரும் காணிக்கையின் தொகை நிர்ணயிக்கப் பட்டதல்ல, அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் பெற்றுக் கொள்வோம்.
இந்தப் பிரச்சினை கிளம்பிய அன்று நான்தான் பூசகராக இருந்தேன். அன்று மூன்று திருமணங்கள்தான் நடைபெற்றன. ஆனால் முப்பது திருமணங்கள் செய்து வைக்கப் பட்டதாக ரமேஷ் என்பவர் பதிவிட்டுள்ளார். இங்கு நடைபெறும் திருமணங்கள் எல்லாம் பதிவு செய்யப் பட்டவை அல்ல. செலவு செய்ய முடிந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் உள்ளே வருவார்கள். சரியான ஆவணங்கள் இருந்தால்தான் திருமணங்கள் செய்து வைப்போம். இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுவோம்.
அதே நேரத்தில் யாரையாவது அழைத்துக் கொண்டு வந்து எங்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்றால் மறுத்துவிடுவோம். அவர்களில் யாராவது புகார் செய்திருப்பார்கள். அதே நேரத்தில் கோவில் பிரகாரங்களிலும் படிக்கட்டுகளிலும் வைத்து திருமணங்கள் செய்து கொண்டு வந்து எங்களை இந்தக் கோவிலில் அர்ச்சனை செய்து தரச் சொன்னால் எங்களால் மறுக்கவும் இயலாது. அந்த அர்ச்சனையைச் செய்து கொடுத்து விடுவோம். அது திருமணக் கணக் கில் வராது. அவர்களது நன்கொடையும் தட்சணையும் தான் எங்களுக்கு வருமானம். இந்தக் கோவிலில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் கொடுத்து விடுவோம்” என்றார்.
இது குறித்து இந்தக் கோவிலின் மேற்பார்வை யாளரான மாரிமுத்து என்பவரிடம் பேசியபோது “பேட்டி கொடுக்க வேண்டிய அதிகாரி நிர்வாக அலு வலர்தான். அவர் இப்போது மீட்டிங்கில் இருப்பதாலும் பொறுப்பு அதிகாரி என்பதாலும் சில தகவல்களைச் சொல்கிறேன். சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப் படும். தகவல் பலகையில் திருமணத்திற்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என்பதை எழுதாமல் விட்டி ருப்பது அறநிலையத்துறையின் குறைபாடுதான். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலதிகத் தகவல்களுக்கு நிர்வாக அலுவலரைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒதுங்கிக் கொண்டார்.
கோவில்களில் திருமணங்கள் செய்து கொள்ள வருபவர்கள் செலவினங்களைக் குறைத்துக் கொள்ளத் தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்த அர்ச்சகர்கள் திருமண வீட்டாரின் மனநிலையைப் புரிந்து கொண்டு இஷ்டத்திற்கும் 3500 மட்டுமல்ல 5000-ரூபாய்வரை வசூலிக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பணத்தை வைத்துக் கொண்டுதான் அவர்கள் சுக வாழ்வில் பயணிக்கிறார்கள் என்பதும் வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது. உண்டியலில் போடும் பணம் மற்றும் சில்லறைக் காசுகள் மட்டும்தான் அரசுக் கணக்கில் இதுவரை வந்திருக்கிறது. ஆனால் அர்ச்ச னைத் தட்டுகளில் விழும் பணமும் அர்ச்சகர்கள் கேட்டுப் பெறும் பணமும் எந்தக் கணக்கிலும் வருவ தில்லை என்பதும் அதைக் கண்டுதான் பக்தர்கள் புலம்புகிறார்கள் என்பதும் இப்போது தெரிய வந்திருக் கிறது.
இந்தச் சம்பவம் என்பது ஒரேயொரு குமரமலையில் மட்டும் நடக்கும் சம்பவமும் அல்ல, புலம்பலும் அல்ல, ஒவ்வொரு கோயில் திருமணங்களிலும் மணவீட்டாரி டம் மாப்பிள்ளை சார்பாக 1001-வய்யுங்கோ, பொண்ணு வீட்டார் சார்பாக 1001 வய்யுங்கோ என்பதில் தொடங்கி, பெண் மாமன் பாக்கு, மாப்பிள்ளை மாமன் பாக்கு, கங்கனம் கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்கும் தனித்தனி யாக என்றும் பிள்ளையார் தட்சணை என்றும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி இரு தரப்பினரிடத் திலும் கடும் வசூல் நடக்கிறது. ஒரு சில இடங்களில் மாப்பிள்ளை வீட்டார் சார்பாகக் கொடுக்கும்போதே நான் என்ன ‘எச்சிளச்சவனா’ என்று மறு தரப்பினர் போட்டி போட்டுக் கொண்டு முடிச்சை அவிழ்க்கும் தன்மைதான் அர்ச்சகர்களை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த சமூக அவலம் குறிப்பிடப் பட்டிருக்கும் குமரமலை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல கோவில்களிலும் இதுதான் நடக்கிறது. கோவிலில் ஏன் திருமணம் செய்து கொள்கிறோம் என்பது பற்றித் தெரிந்திருக்காதவரையில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களும் வழிப்பறிச் சம்பவங்களும் நடக்கத்தான் செய்யும்
எனினும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு முகூர்த்த நாட்களில் கோயில் திருமணங்கள் நடைபெறும்போது இந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் கண்காணிக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாக இருக்கிறது.
– ம.மு.கண்ணன். புதுக்கோட்டை