‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

4 Min Read

‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஜூலை.31– சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு ஒதுக்கீடு ஆணைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல் குறிக்கோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக கொண்டு வந்து கடந்த 4.5 ஆண்டுகளாக சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்விற்கு விலக்கு தரவேண்டும் என்று முதலமைச்சர் நீண்ட காலமாக சட்ட ரீதியாக போராட்டிக் கொண்டிருக்கிறார்.

‘நீட்’ தேர்விற்கு விலக்கு என்பது தான் நமது முதலமைச்சரின் முதல் குறிக்கோள் ஆகும். நீட் தேர்வு விலக்கு நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியது.

நீட்டின் நெடும் பயணம்

அதையும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். அதன்பிறகு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆளுநர் குடியரசுத்தலைவர்க்கு அனுப்பினார். குடியரசுத்தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆயுஷ் நிர்வாகம், தொடர்ச்சியாக பல்வேறு விளக்கங்கள் கேட்டு 7 முறை தெளிவுரைகள் கேட்டு, சட்ட வல்லு னர்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அதற்கான விளக் கங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இத்தகைய நீட் விலக்கு நெடும்பயணம் தொடர்கிறது என்றார் அவர்.

சென்னையில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகள் மூலம் ரூபாய் 90 லட்சம் சேமிப்பு

சென்னை, ஜூலை 31 சென்னையில் மின்சாரப் பேருந்துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்கட்டமாக கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை வியாசர்பாடி பணிமனையில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 28-ஆம் தேதி வரை 12.80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில் டீசல் பேருந்துகளை இயக்கியிருந்தால் அரசுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவாகி இருக்கும். மின்சாரப் பேருந்துகளை இயக்கியதன் மூலம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவாகி யுள்ளது. இதனால் ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த 120 மின்சாரப் பேருந்துகள் 6 லட்சத்து 55 ஆயிரம் கி.மீ. வரை இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டி.எம்.சி. நீரை வழங்குவதை கருநாடகா உறுதி செய்ய வேண்டும்

காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 31  உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று  (30.7.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் 30ஆம் தேதி  நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறையின் செயலர் ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் தற்போது மேட்டூர் அணையின் நீர்இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக இருப்பதையும், கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு நேற்று (30.7.2025) காலை நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருவதாகவும் எனவே, நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், கருநாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதாலும், தமிழ்நாட்டுக்கு  வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டியநீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் காவிரி தொழில் நுட்பக் குழுமத்தின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும்

இந்தியாவில் பொருளாதாரத்தில் பெரிய மாநிலங்களின் வருமான வளர்ச்சி உயர்வு காணும் என தனியார் தரவு நிறுவனமான ‘கிரிசில்’ கணித்துள்ளது.

அதன் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியடைந்த பெரிய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த நிதியாண்டில் (2025-2026) 7 முதல் 9 சதவீதம் வரை வருமான வளர்ச்சி காணும் என்று தெரிவித்துள்ளது. இதற்குக் காரணமாக சரியான ஜிஎஸ்டி வசூல்கள், அதிகமான பொருளாதார செயல்பாடுகள், மிதமான பணவீக்கம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருமான வளர்ச்சி குறைவாக இருந்த நிலையில், இது மீள்வளர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *