ஆச்சரியம் – ஆனால் உண்மை! கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் எடப்பாடி பழனிசாமி உறுதி

2 Min Read

சிவகங்கை, ஜூலை 31  கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சிவகங்கையில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (30.7.2025) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை கடந்த 2015 முதல் 2017 வரை ஒன்றிய அரசு நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வை ஒன்றிய தொல்லியில் துறை அனுமதி பெற்று 2018-இல் அதிமுக அரசு மேற்கொண்டது. கடந்த 2019-இல் 5-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.5 கோடியில் கீழடி அகழ்வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டினோம். அதன் பிறகு தான் ஆட்சி மாற்றம் வந்தது.அதிமுக அரசு 6 கரிம மாதிரிகளை அமெரிக்கா நாட்டில் புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்பியதில், கீழடி நாகரிகத்தின் காலம் கிமு 6-ஆம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டது.

அதிமுக அரசு, அமெரிக்கா சிகாகோ நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நிதியுதவி செய்தது. அங்கு முதன்முறையாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தினோம். அந்த கண்காட்சிக்கு ‘கீழடி என் தாய்மடி’ என பெயரிடப்பட்டது.மேலும் 6,720 தொல்பொருட்களை மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தோம். கடந்த 2020-இல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கத்திலும் கீழடி தொல் பொருட்களை காட்சிக்கு வைத்தோம். ஆனால் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

தொல்லியல் துறைக்கு அதிமுக அரசு 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.105 கோடி நிதி ஒதுக்கியது. தமிழ்நாட்டில் நடந்த 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வில் அதிமுகவுக்கு பங்கு உண்டு.

துணை நிற்போம்

கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. இதில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கையில் ஒன்றிய அரசு என்ன விளக்கம் கேட்டது? . திமுக அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. கீழடி ஆய்வுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. கீழடி விவகாரத்தில் மாநில அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *