கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 Min Read

சென்னை, ஜூலை.31– கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம்  (‘லைசென்ஸ்’) பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு அமைத்து தமிழ் நாடு அரசு உத்தர விட்டு உள்ளது.

வணிகர்களுக்கு உரிமம்

கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் வாங்க வேண்டும் என்றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகை யில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அய்.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல தனது வழக்கமான அவதூறு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளார்.

உண்மையில் கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறவேண்டும் என்பது 1958-இல் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இல் பிரிவு 159-இன் படியும் அ.தி.மு.க.ஆட் சிக்காலத்தில் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதே சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் “அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்ததுதான் இந்த நடைமுறை.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் , 2011-2012-இல் 85,649 இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் 2020-2021-இல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. அதே போல் 2011-2012இல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் இவரது ஆட்சிக் காலத்தில் ரூ.12.90 கோடியாக உயர்ந் தது. இவையெல்லாம் கோப்புகளில் உள்ளது. அவர் மறுக்க முடியாது.

செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு கிராமப்புற சிறு வணிகர்களுக்காக பரிந்து பேசுவது போல இவர் நாடகம் ஆடுவதைப் பார்த்துப் பொதுமக்கள் ஏமாந்து போக தயாராக இல்லை.

புதிதாக விதிகள் உருவாக்கம்

தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு ஆண்டுகளாக பல இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன.

இந்த குறைகளை நீக்கும் பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை உள்ளது. வெளியிடப்பட்டு உள்ளது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணை நிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம்.

குழு அமைப்பு

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *