மழலை விண்மீனைச் சுற்றி புதிய கோள்கள் பிறக்கும் தருணத்தை வானவியலாளர்கள் முதல் முறையாகப் படம் பிடித்துள்ளனர்.
பூமி போன்ற கோள்கள் எங்கே, எப்படி உருவாகின்றன என்ற புதிருக்கு விடை அளிக்கும் வகையில், புதிதாகப் பிறந்த மழலை விண்மீனைச் சுற்றி சுழலும் வாயு நிலையில் உள்ள திரள்வட்டில் முதன் முதலாக திடத் துகள்கள் உருவாகும் அந்தக் கணத்தை வானியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
ALMA (அட்டாகாமா லார்ஜ் மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் அரே) ரேடியோ தொலைநோக்கி மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) ஆகியவற்றைப் பயன்படுத்தி, 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள HOPS-315 என்ற மழலை விண்மீனைச் சுற்றி கனிமத் துகள்கள் திடப்பட்டு தூசாக உருவாகும் நிகழ்வை ஒரு பன்னாட்டு ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
கோள் உருவாக்கத்தின் முக்கியமான தருணம்
தாவர வளர்ச்சியில் விதை சூல் கொள்வது முக்கிய கட்டம் என்றால், அதுபோலக் கோள்கள் உருவாக்கத்தில் சிலிக்கான் மோனாக்சைடு திட துகளாக மாறுவதே கோள் சூல் கொள்ளும் நிகழ்வாகும். எனவேதான் HOPS-315 மழலை விண்மீனைச் சுற்றியுள்ள திரள்வட்டில் முதன் முறையாகத் திட நிலையில் சிலிக்கான் மோனாக்சைடு உருவாவதைப் படம் பிடித்த இந்த ஆய்வு, வானவியல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“முதல் முறையாக, நம் சூரியனைத் தவிர வேறு ஒரு விண்மீனைச் சுற்றி கோள் உருவாக்கம் தொடங்கும் ஆரம்ப கட்டத்தைக் கண்டறிந்துள்ளோம்” என்கிறார் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைவருமான மெலிசா மெக்லூர். இந்த ஆய்வு சமீபத்தில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது.