சென்னை, ஜூலை 30– கம்யூனிஸ்டு தலைவர்கள் 100 பேரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
புத்தகம் வெளியீடு
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 28.7.2025 அன்று, எழுத்தாளர் ஜீவபாரதி எழுதிய ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட அதை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொணடனர்.
முதலமைச்சர் வாழ்த்து
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்து செய்தியை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வர்க்க விடுதலை, சமூக விடுதலைக்காக பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இன்று வரை இயங்கி வருகிறது. சங்கரய்யா, நல்லகண்ணு போன்று இன்றைய தலைமுறையினர் பார்த்து வியந்த தலைவர்கள் முதல், பிரபலமான முந்தைய தலைவர்களின் வரலாறும், தியாகவாழ்வின் சிறப்பும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுச் சமூகத்திற்கும் வழி காட்டக் கூடிய மிகப்பெரிய ஆவணமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொதுவுடைமை இயக்கம் குறித்த கருத்துகளையும், கம்யூனிஸ்டு தலைவர்களின் தியாக வாழ்வு குறித்த தகவல்களை இன்றைய தலைமுறையினரும் அறிந்திடும் வகையில், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிட ஆவன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு இயக்கத்தினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு
தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதன்படியே, 100 ஆண்டுகள் கண்ட கம்யூனிஸ்டு கட்சி மாறாத தன்மையுடன் மக்களுக்காக போராடி வருகிறது. உழைக்கும் மக்களுக்கான இயக்கமாக இது உள்ளது. இதன் தேவை என்றும் தீர்ந்துபோகாது. ஒவ்வொரு இடத்திலும் கம்யூனிசம் ஒலித்துக்கொண்டே இருக்கும். கம்யூனிஸ்டுகள் செய்த தியாகத்தை தாண்டிதான் நாம் மேலே செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து பேசிய தாவது:- இந்த நாட்டுக்கு கம்யூனிச தத்துவம் உண்மையாக இருக்கிறது. அதனாலேயே இந்த கட்சியை அழிக்க முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் காற்றை போன்றது. ஆட்கள் மாறினாலும் கம்யூனிசம் மட்டும் மாறாது. தியாகம் இல்லாத கட்சி வாழ்வதில்லை.தியாகத்தின் அடிப்படையில் செதுக்கப்பட்ட கட்சியாக இந்த கட்சி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.
டி.ராஜா
நிகழ்ச்சியில், டி.ராஜா பேசுகை யில், ‘விடுதலை பெற்ற இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமே நசுக்கப் பட்டு வருகிறது. மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தை செயலிழக்க செய்யும் நடவடிக்கையை பா.ஜனதா செய்து வருகிறது. எனவே, கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், தந்தை பெரியாரை பின்பற்றுபவர்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்’ என்றார்.