தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைத் தராதது ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்!

4 Min Read

சென்னை, ஜூலை 30- மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வி நிதி

மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் ஒன்றிய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும்

மேலும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒன்றிய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சினை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ராகுலின் மனிதநேயம்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த
22 காஷ்மீர் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார்

சிறீநகர், ஜூலை 30- பாகிஸ்தான் குண்டு வீச்சில் பெற்றோரை இழந்த 22 காஷ்மீர் குழந்தைகளின் கல்விச் செலவை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டார்.

சுற்றுலாப் பயணிகள்

காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.

அதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகள் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகளாலும் சுட்டது. அதில், 28 பேர் பலியானார்கள். அவர்களில் பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.

படிப்புச் செலவு

இந்நிலையில், இத்தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 காஷ்மீர் குழந்தைகளின் படிப்பு செலவை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஏற்றுள்ளார்.

இதுகுறித்து காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் தாக்குதல் முடிந்த பிறகு ராகுல்காந்தி பூஞ்ச் மாவட்டத்துக்கு வந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார்.

தாக்குதலில் தாய் அல்லது தந்தையையோ அல்லது இருவரையுமோ பறிகொடுத்த பள்ளி செல்லும் குழந்தைகளின் பட்டியலை தயாரிக்குமாறு எங்களிடம் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார். அதன்படி நாங்கள் பட்டியல் தயாரித்து அவரிடம் அளித்துள்ளோம்.

படிப்பு பாதிக்கக் கூடாது

எங்கள் பட்டியலில் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டும் 22 பேர் இடம்பெற்றுள்ளனர். எனது 3 நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு பிறகு மேலும் பல குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

22 குழந்தைகளின் படிப்பு செலவை ராகுல் காந்தி ஏற்றார். படிப்புக்காக அவர் அனுப்பிய நிதியுதவியை அக்குழந்தைகளிடம் ஒப்படைப்பேன். படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ராகுல்காந்தி இந்த உதவியை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *