சமூக நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

2 Min Read

சென்னை, ஜூலை 30-  சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றதை சுட்டிக் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சாதகமான தீர்ப்பு வெளிவந்தது.

இந்த வெற்றியைக் குறிப்பிட்டு, மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் நேற்று (29.7.2025) வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்ப தாவது:

சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்று, அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிய வழியில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம், ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4,022 இடங்களும், பல் மருத்துவப் படிப்புகளில் 1,000 இடங்களும் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் இந்தப் பணி மகத்தானது மட்டுமல்ல, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனை பயணம் தொடரட்டும், சமூக நீதி தீர்ப்பு சிறக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

உரக்கச் சொல்வோம்

இதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு. சதிக்குக் கால் முளைத்து ஜாதியாகி, உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது என சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்.

சமூக நீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்’’ என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *