சென்னை, ஜூலை 30- பிளஸ்-2 பொதுத்தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-2026) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025இல் தொடங்கி தற்போது முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தவறிய மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி வாய்ப்பை தவறவிட்டோம் என்று சோர்வடைந்து விடாமல் இருக்க அவர்கள் உயர்கல்வி வாய்ப்பினை பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உடனடியாக துணைத்தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இக்கல்வியாண்டே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
சென்னை, ஜூலை 30- சென்னையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மையத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்கினர். அன்னாரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள், மனவளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகளை இந்த அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் 34-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பரிவாலயா மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்படி 30-க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்அய்சி பயிற்சி மய்ய மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, மேனாள் அதிகாரிகள் ஆறுமுகசாமி, கண்ணதாசன், வளர்ச்சி அதிகாரி அய்யாசாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அரும்பாக்கம் கே.வாசுகிநாதன், லட்சுமி, திலகர் மற்றும் பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான
சதுப்பு நில நடவு முறைகள் பயிற்சி
சென்னை, ஜூலை 30- உலக சதுப்பு நில தினத்தைக் கொண்டாடும் வகையில், அண்மையில் (ஜூலை 26 அன்று), கோவளம் கடற்கரை பகுதியில், மாபெரும் சதுப்பு நில மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை, காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் சிவில் என்ஜினியரிங் துறை, இந்தியப் பெருங்கடல் சங்கம், தேசிய கடலோர ஆராய்ச்சி மய்யம், தி மாங்குரோவ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா, 4i ஆப்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஆர்.எஸ். கங்கரா முறைப்படி தொடங்கி வைத்தார். கடலோர வனப் பாதுகாப்புக் குழு பிரிவு வனச்சரகர் பொன்.செந்தில் தலைமை வகித்து, முதல் மரக்கன்றை நட்டார். இந்தியப் பெருங்கடல் சங்கத்தின் சென்னை பிரிவுத் தலைவரும், என்.சி.சி.ஆர், மையத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் டியூன் உஷா மற்றும் அதன் துணைத் தலைவரும், என்.அய்.ஓ.டி. மய்யத்தின் விஞ்ஞானியுமான ஜோஷியா ஜோசப், அதன் செயலரும், என்.அய்.ஓ.டி. மையத்தின் விஞ்ஞானியுமான கே.திருமுருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மாங்குரோவ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகளான மீராசா மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சதுப்பு நிலத் தோட்டம் குறித்த ஒரு அறிமுக உரையை நடத்தினர். பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள நடவு முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சியாக இந்த அமர்வு அமைந்தது.