ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பரில் செலுத்தப்படும்

1 Min Read

இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை, ஜூலை 30 இஸ்ரோவின் ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆளில்லா விண்கலம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘நாசா இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோள் வரும் ஜூலை 30-ஆம் தேதி (நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் உள்ள எஸ்-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. மேகமூட்டம், மழை என எந்த சூழலாக இருந்தாலும், இரவு – பகல் என 24 மணி நேரமும் பூமியை இந்த செயற்கைக் கோள் துல்லியமாக புகைப்படம் எடுக்கும். பூமியில் உள்ள இயற்கை வளங்களை கண்டுபிடிக்கவும், நிலச்சரிவு போன்ற பேரிடர் பாதிப்புகளை கண்டறியவும் இது உதவும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு ஆளில்லாத 3 விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான முதல் விண்கலம் சிறீஅரிகோட்டாவில் தயாராகி வருகிறது. வரும் டிசம்பரில் அதை அனுப்ப உள்ளோம். அதில் மனிதருக்கு பதிலாக ரோபோட்டை வைத்து அனுப்ப இருக்கிறோம். இந்த திட்டம் வெற்றியடைந்தால், 2026-இல் மேலும் 2 ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்படும்.

மனிதரை அனுப்பும் திட்டம்

இந்த சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு, 2027 மார்ச்சில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவோம். நிலவில் இறங்கி மாதிரிகளை எடுத்து வருவதற்கான ‘சந்திரயான் 4’ பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. இது 2027-இல் செலுத்தப்படும். ஜப்பானுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் ‘சந்திரயான் 5’, நிலவுக்கு 2028-இல் அனுப்பப்படும். சந்திரயான்-5 நிலவில் 100 நாட்கள் ஆய்வு பணியில் இருக்கும். நாம் அனுப்பிய 55 செயற்கைக் கோள்கள், தற்போது விண்ணில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அடுத்த 4 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் வகையில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *