உலகத் தலைவர் தந்தை பெரியார்

4 Min Read

ஒரு நாட்டின் முன்னேற்றம்  என்பது அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது ஆகும். பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே எந்த ஒரு நாடும் வளர்ந்த நாடாக வளர்ச்சி பெற்ற நாடாக ஏற்றம் பெற இயலும் என்பது வரலாற்று

அவ்வகையில், தந்தை பெரியார் அவர்கள் பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றின் அவசியத்தைப் பற்றி

தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்ததின் விளைவாக, நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விதியை நினைத்து வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர

மக்களை தட்டி எழுப்பி, கல்வியின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைத்து அவர்களை விழிப்படையச் செய்தவர் பெரியார்.

பெண்கள் சிந்தித்தால் பாவம், கேள்வி கேட்டால் கேடு வந்து சேரும் என்று பயமுறுத்தி வைத்திருந்த ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகத்தில், ஏன்? எதற்கு? எப்படி? என்று துணிந்து கேள்வி கேட்கச் சொன்னவர் தந்தை பெரியார்.

ஒரு ஆணாக இருந்து கொண்டு பெண்களின் நலனிற்காக, வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் பெரியார்.  பெண்கள் கையில் இருக்கும் கரண்டியைப் பிடிங்கிக் கொண்டு அவர்களிடம் புத்தகத்தைக் கொடுங்கள் என்றும்,

பிற நாட்டுப் பெண்களைப்  போன்று நம் நாட்டுப் பெண்களும் ஆண்களின் தயவை எதிர்பாராமல் வாழவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியவர் பெண்ணுரிமை மாண்பாளர் பெரியார் அவர்கள் ஆவார்.

மனித வர்கத்தினருக்குள் இருக்கும் அடிமைத்தனம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் – கொடுமையும் அழிய வேண்டும் என்று தனது  வாழ்நாள் முழுவதும் பெண்களின் உயர்வுக்காக, முன்னேற்றத்திற்காக வாதாடியவர், போராடியவர் தந்தை பெரியார்.

இவ்வாறு, யாரும் சிந்திக்காத சிந்திக்கத் துணியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு முற்போக்குச் சிந்தனைகளை, பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டுச் சென்றவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.

மேலும் பெண்கள்  முன்னேற்றம், கல்வி-வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பேச்சளவில் நின்றுவிடாமல் அவை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதற்காக ஊர் ஊராக பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி மக்களை செம்மைபடுத்தி, கூர்மைப்படுத்தி சிந்திக்கத் தூண்டியவர் தந்தை பெரியார். இதன் காரணமாக, அறியாமையில் மூழ்கிக் கிடந்த பாமரமக்கள் மெல்ல மெல்ல பெண் கல்வியின் மேன்மையை உணரத்  தொடங்கினர் என்பது தந்தை பெரியாரின் ஈடு இணையற்ற உழைப்பிற்குக் கிடைத்த உன்னத வெற்றியாகும்.

இதனைத் தொடர்ந்து, 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17&18 ஆகிய இரண்டு நாட்கள் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக, ஒன்றிய-மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவத் துறையில் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வார்த்தெடுத்தார் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார்.

தொலைநோக்காக செங்கற்பட்டில் வார்த்தெடுத்த மேற்கண்ட தீர்மானத்தின் வெளிப்பாடாக, இந்தியாவில் மட்டுமன்றி மேலை நாடுகளான நார்வே, சுவீடன், இஸ்ரேல், வடகொரியா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடான எரித்திரியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் ராணுவ சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை  கடைபிடிக்கப்பட்டு வருவது ‘ தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் ‘ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைரவரிகளை மெய்ப்பித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது சிறப்பிலும் சிறப்பு.

இந்நிலையில்,  அய்ரோப்பிய நாடான டென்மார்க்கிலும் பெண்களை ராணுவத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் பிரபல நாளேடு ஒன்றில்  (03.07.2025) வெளியான செய்தியைக் கண்ணுற்ற சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் மனிதநேயப் பண்பாளர்கள், மகளிர், இளைஞர்கள்-மாணவர்கள் உள்ளிட்டோர் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைந்தனர்.

இத்தகைய மகிழ்வான சூழலில், தந்தை பெரியார் அவர்களின் பெருமுயற்சியால் முதல் சுயமரியாதை இயக்க மாநாடு (1929) நடைபெற்ற அதே செங்கற்பட்டில் (மறைமலைநகரில்) வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய   நிகழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 04.10.2025 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு ஆகியவை நடைபெற இருக்கின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு, காவல் துறை மற்றும் ராணுவத் துறையிலும் பெண்கள்  பெருமளவில் அங்கம் வகித்து முத்திரை பதித்து வருகின்றனர் எனும் செய்தி ‘தந்தை பெரியார் உலகத் தலைவர்   என்பதற்கான  எடுத்துக்காட்டாகும்.

காலம் தாழ்ந்தாலும் தாழ்த்தப்பட்டாலும் தந்தை பெரியார் கொள்கை வெற்றிமுனையை அடைந்தே தீரும் என்பதற்கு கல்வெட்டுச் சான்றாக,  தற்போது பாரெங்கும் பெரியார் கொள்கை பரைசாற்றப்பட்டு வருகின்றன என்பது தேனினும் இனிய செய்தியாகும்.

வாழ்க உலகத் தலைவர் பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

– சீ. இலட்சுமிபதி,

தாம்பரம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *