21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை?

2 Min Read

‘பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா என்பதையும், சாலையின் அகலம், தேரின் நீளம், அகலம் போன்றவை குறித்தும் ஆய்வு செய்து, பெரம்பலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்,  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் தரப்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும்’ என கூறப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, ”கோவிலில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக தேர் செல்ல வேண்டும்; அதற்குத் தேவையான பாதுகாப்பை, மாவட்ட காவல் துறை வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.

இந்த 2025ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு வழக்கு – அதன்மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

‘‘இந்துக்களே, ஒன்று சேருங்கள் – இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம்’’ என்று வெற்றுக் கூச்சல் போடும், பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார்கள், காவிகள் எங்கே போனார்கள்?

நியாயப்படி, சட்டப்படி, பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் தேர் செல்லத் தடை விதித்தவர்கள்மீது வன்கொடுமைத் தடை சட்டம் பாய்ந்திருக்க வேண்டும்.

அப்படி செய்யப்பட்டு இருந்தால், இது போன்ற மக்களை தீண்டாமைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பிற்போக்குவாதிகளின் கொட்டம் அடங்கியிருக்கும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் முழுமையான தீர்ப்பு ஒன்று கிடைக்குமானால், இத்தகைய ஜாதி வெறியர்களின் கொட்டம் முழுமையாக இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும். இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு வேறு மதத்தைத் தழுவியதற்கே காரணம் இந்து மதத்தின் வேராக இருக்கும் இந்த ஜாதியும் – தீண்டாமையும்தான் என்பதை மறந்து விட வேண்டாம்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *